கேரள சட்டமன்றத்தில் தண்ணீருக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார் முதலமைச்சர் பினராயி விஜயன்
கடவுளின் பூமி என அழைக்கப்படும் கேரளா, இயற்கையும் அழகும் நிறைந்த மாநிலம். காலம் தவறாது பெய்யும் பருவமழையினாலும் அதிகமான நீர்நிலைகள் ஆறுகள் நிறைந்த மாநிலம் என்பதால் எப்போது பச்சைப்பசேல் என காட்சியளிக்கிறது.
ஆனால், அப்படியான ஒரு மாநிலத்திலேயே கோடைக்காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் நிலவுகிறது. அதனால், அதில் இருந்து கேரள மாநிலத்தைக் காப்பாற்றவும், நீர் ஆதாரங்களை பாதுகாக்கவும் கேரள சட்டமன்றத்தில் “water Budget” என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார் முதலமைச்சர் பினராயி விஜயன்.
முதல்கட்டமாக, 94 கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய முதல் கட்ட நீர் பட்ஜெட்டின் விவரங்களை கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து பேசிய பினராயி விஜயன், “கேரள மாநிலத்தில் தண்ணீர் இருப்பு குறைந்து வருவதால், நீர் வளத்தை முறையாகப் பயன்படுத்தவும், வீணாவதைத் தடுக்கவும் தண்ணீர் பட்ஜெட் உதவிகரமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே முதல்முறையாக இப்படி ஒரு பட்ஜெட் அறிமுகப்படுத்தி இருப்பதை நீர் மேலாண்மை துறை சார்ந்த வல்லுநர்கள் பலர் வரவேற்று பாராட்டி வருகின்றனர்.