கேரள மாநிலம் பரப்பனங்குடியில் நடந்த படகு விபத்தில், படகு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குடியரசுத்தலைவர், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் மல்லப்புரம் மாவட்டத்தில் உள்ள தனூர் – பரப்பனங்குடி கடற்கரையில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். நாசர் என்பவருக்குச் சொந்தமான சொகுசு படகில் சுற்றுலா பயணிகளை சவாரி ஏற்றிச் சென்றுள்ளனர். கடற்கரையில் இருந்து படகு சிறிது தூரம் சென்றதும் கடலில் தத்தளித்து கவிழ்ந்திருக்கிறது. அதில் 50க்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளனர். அதில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
படகுகு விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, 20 பேர் செல்லக்கூடிய படகில் 40 பேரை ஏற்றிச் சென்றதே விபத்திற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் படகு உரிமையாளர் நாசர் என்பவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். படகு பயணம் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகவும். மீன்பிடி படகை சுற்றுலா சேவைக்கு பயன்படுத்தியதும் அதற்கு சுற்றுலாத்துறையிடம் இருந்து உரிய அனுமதி பெறாததும் தெரியவந்திருக்கிறது.
கடலில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கோர சம்பவத்திற்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ள இரங்கல் பதிவில் “கேரள மாநிலம் மலப்புரத்தில் படகு விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ள பிரதமர் மோடி, “கேரள மாநிலம் மலப்புரத்தில் படகு விபத்துக்குள்ளானதில் உயிர் இழந்தது வேதனை அளிக்கிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு அனுதாபங்கள். உதவித் தொகையாக ரூ.2 லட்சம் இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்” என பிரதமர் அலுவலக ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.