2 நாட்களுக்கு பிறகு கோரமண்டல் விரைவு ரெயில் சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று புறப்பட்டது
ஒடிசா ரெயில் விபத்தால் இதுவரை ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பாதை சீரமைக்கப்பட்டதன் காரணமாக இன்று முதல் ரெயில் சேவை துவங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்று வரை 90 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 56ஆக குறைக்கப்பட்டது.
இந்நிலையில் 2 நாட்களுக்கு பிறகு ஒடிசா மார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து விபத்து நடைபெற்ற பகுதி வழியாக முதல் ரெயிலாக கோரமண்டல் விரைவு ரெயில் காலை 10:45 மணிக்கு இயக்கப்பட்டது. 3 மணி நேரம் 45 நிமிட தாமதத்தில் இந்த ரெயில் இயக்கப்பட்டது.
காலை 10.45 மணிக்கு புறப்பட்ட கோரமண்டல் விரைவு ரெயில், விஜயவாடா, ராஜமுந்திரி விசாகப்பட்டினம் வழியாக ஆந்திராவை கடந்து ஒடிசாவின் பிரம்மப்பூர், புவனேஸ்வர் மற்றும் பதராக் ஆகிய பகுதிகளின் வழியாக விபத்து நடைபெற்று இருப்புப் பாதை சீரமைக்கப்பட்ட பாலசோரைக் கடந்து கொல்கத்தாவின் ஷாலிமர் ரெயில் நிலையத்தை நாளை சென்றடைய உள்ளது.