சந்தானமும் பாண்டிச்சேரி பேய்களும்!

கரோனா காலத்துக்கு முன்பே பேய் படங்களின் படையெடுப்பு முடிந்துவிட்டது என்றே ரசிகர்கள் நம்பினார்கள். ஆனால், இன்று ஒரே நாளில் இரண்டு பேய் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அவற்றில் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம். அவருக்கு வசூல் வெற்றியாக அமைந்த ‘தில்லுக்கு துட்டு’ பட வரிசையின் மூன்றாம் பாகமாக உருவாகியுள்ள இப்படம் முழுக்க, தனது பாணி நகைச்சுவையைத் தெறிக்கவிட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார் சந்தானம்.

பிரெஞ்சு பிரபு ஒருவர் வாழ்ந்த பாழடைந்த அரண்மனை பாண்டிச்சேரி கடற்கரையை ஒட்டி இருக்கிறது. அதற்குள் தனது காதலி, 3 நண்பர்களுடன் நுழைய வேண்டிய கட்டாயம் சந்தானத்துக்கு உருவாகிறது. அங்கு வசித்துவரும் பிரென்சு பேய்களுடன் சூதாட்டம் ஆடி, அதில் ஜெயித்தால்தான் உயிரோடு வெளியே வரமுடியும் என்கிற நிலை. இந்த திகில் கேமில் வேறு யாரெல்லாம் வலிய வந்து சிக்குகிறார்கள். சந்தானமும் அவரது டீமும் அரண்மனையிலிருந்து வெளியே வந்தார்களா இல்லையா என்பதுதான் கதை. ‘இப்படத்தில் வரும் பேய்களைப் பார்த்துச் சிரிப்பு வருமே தவிர பயம் வராது’ என்று கூறியிருக்கிறார் இப்படத்தை இயக்கியிருக்கும் பிரேம் ஆனந்த்.

அந்த இரண்டாவது பேய் படம் ‘பீட்சா 3 – தி மம்மி’. விஜய்சேதுபதிக்கு முதல் பெரிய வெற்றிப் படமாக அமைந்த ‘பிட்சா’ வரிசையில் 3வது படம். அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை மோகன் கோவிந்த் இயக்கியுள்ளார். திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்துள்ளார். உணவகம் ஒன்றில் தங்கிப் பணிபுரியும் நாயகன் சந்திக்கும் அம்மா பேயும் அதன் அட்டகாசங்களும்தான் கதையாம். இந்தப் பேய்களுக்கு மத்தியில் மாட்டிக்கொள்ளும் மற்ற படங்களின் நிலை என்ன என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.