ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏவுததற்கு தயார் நிலையில் உள்ள சந்திரயான் – 3 விண்கலத்துடன் கூடிய ராக்கெட்.
சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றி விண்வெளி அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியாவை அடுத்தக்கட்டத்துக்கு இட்டுச் செல்லும் என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் நம்பி நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும், இதில் வெற்றி கண்டால் உலகளவில் மூன் மிஷனில் வெற்றி பெற்ற 4வது தேசம் என்ற அந்தஸ்தையும் இந்தியா பெறும் என்று கூறினார்.
600 பில்லியன் டாலர் மதிப்பிலான சர்வதேச விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இந்தியாவின் பங்களிப்பு 2 சதவீதம் மட்டுமே.தொழில்நுட்ப வளர்ச்சியில் தனியார் பங்களிப்பு அதிகரிக்கும்போது விண்வெளி ஆராய்ச்சித் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உதயமாவதும் அதிகரிக்கும் என்று நம்பி நாராயணன் கூறினார்.
இன்று ஏவப்படும் விண்கலம்: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த 2019 ஜூலை 22-ம் தேதி விண்ணில் செலுத்தியது. பல்வேறுகட்ட பயணங்களுக்கு பிறகு, சந்திரயான்-2 விண்கலம் 2019 செப்டம்பரில் நிலவின் சுற்றுப்பாதையை அடைந்தது. எனினும், தொழில்நுட்பக் கோளாறால் லேண்டர் கலன் தரையிறங்காமல், நிலவில் மோதி செயலிழந்தது. அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர், நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
இதையடுத்து, சந்திரயான்-3 விண்கலத்தை ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்தது. இந்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மார்க்-3) ராக்கெட் மூலம் இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. நிலவில் தடம் பதிக்கும் சந்திரயான்-3 ஒரு நிலவு நாள் முழுவதும் அங்கு இயங்கி ஆய்வுகளை மேற்கொள்ளும். ஒரு நிலவு நாள் என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமம் என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் விளக்கியிருக்கிறார்.
இலக்கு என்ன? சந்திரயான் -3 மிஷனின் பிரதான இலக்கு நிலவின் புகைப்படத்தை அருகிலிருந்தும் தொலைவிலிருந்து முழுமையாக எடுப்பதே ஆகும். அது தவிர நிலவின் பரப்பில் உள்ள ரசாயன, கனிமவியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளுதல் என்று விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.