சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் கம்பீரச் சிலை : சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மண்டல் கமிஷனை அமைத்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்த சமூகநீதிக் காலவர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் கம்பீரச் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 110 விதியின் கீழ் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அறிவிப்பை வெளியிட்டு பேசிய முதலமைச்சர், “சமூகநீதிக் காவலரும் இந்தியா முழுமைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிதாமகனாக விளங்கும் மறைந்த வி.பி.சிங் அவர்களுக்கு இந்த திராவிட மாடல் அரசு மரியாதை செய்ய நினைக்கும் மகத்தான அறிவிப்பை இந்த மாமன்றத்தில் வழங்குவதற்காக நான் பெருமைப்படுகிறேன்.

மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்தது பதினோரு மாதங்கள் தான் என்றாலும், அவர் செய்த சாதனை என்பது மகத்தானவை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு ஒன்றிய அரசு பணியிடங்களில் தனி இடஒதுக்கீடு தரப்பட்டது. ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு தரப்படவில்லை. இதனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட இரண்டாவது பிறபடுத்தப்பட்டோர் ஆணையம் தான் பி.பி.மண்டல் தலைமையிலான ஆணையம்.

சமூகரீதியாகவும் – கல்வியிலும் பின் தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒன்றிய அரசுப் பணியிடங்களில் 27 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பி.பி.மண்டல் பரிந்துரையின் உத்தரவை அமல் படுத்திய சமூகநீதிக் காவலர் தான் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்.

மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் திமுக போராடியது. இடஒதுக்கீடே கிடையாது என்று சொல்லி வந்த ஒன்றிய அரசை, 27 சதவிகித இடஒதுக்கீடுக்கு ஒப்புக்கொள்ள வைத்தது திமுக உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் நடத்திய போராட்டங்களால் தான்.

அதனை மனதில் வைத்துத்தான் அகில இந்திய அளவில் சமூகநீதிக்கான கூட்டமைப்பை உருவாக்கி இருக்கிறோம். அதேபோல சி.ஆர்.பி.எஃப் தேர்வினை தமிழிலும் எழுத வகை செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினோம். அதுவும் இப்போது நிறைவேறி இருக்கிறது.

அனைத்து வகையிலும் சமூகநீதியை நிலைநாட்டும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இத்தகைய கொள்கை உரத்தை வழங்கியவர்களில் ஒருவர் வி.பி.சிங் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. தமிழ்நாட்டு மக்களின் உயிர்பிரச்னையான காவிரி நீருக்காக நடுவர் மன்ற ஆணையத்தை அமைத்துத்தந்தவர் வி.பி.சிங்.

சென்னையில் அமைந்துள்ள உள்நாட்டு விமான முனையத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயரையும் – பன்னாட்டு விமான முனையத்துக்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரையும் சூட்டிய ஒப்பற்ற தலைவரான வி.பி.சிங் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் சென்னையில் அவரது முழுவுருவக் கம்பீரச் சிலை அமைக்கப்படும் என்பதை இம்மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.” என சட்டப்பேரவையில் அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.