சரிவுடன் தொடங்கி பின்னர் உயர்ந்த பங்குச்சந்தை!

கடந்த இரண்டு நாட்களாக உயர்வில் தொடங்கிய பங்குச்சந்தை இன்று சரிவில் தொடங்கியது. வர்த்தக நேரத்தில் உயர்வுடன் காணப்பட்டது.

நேற்று மற்றும் அதற்கு முந்தைய தினம் கனிசமான புள்ளிகள் உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை இன்று சரிவுடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை தொடக்கத்தில் 55 புள்ளிகள் சரிவுடன் 61,930 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 15 புள்ளிகள் சரிந்து 18,330 ஆக இருந்தது.

வர்த்தக நேரத்தின் போது மும்பை பங்குச்சந்தை 143.15 புள்ளிகள் உயர்ந்து 62,124 ஆகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 31.55 புள்ளிகள் உயர்ந்து 18,379 ஆகவும் இருந்தது. சர்வதேச அளவிலான பங்குச்சந்தையில் மந்தநிலை காரணமாக பங்குச்சந்தை இன்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் என சொல்லப்படுகிறது.

அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 3வது நாளாக இன்றும் உயர்வுடன் வர்த்தகமாகி வருவதால் இந்திய பங்குச்சந்தை சாதகமாகவே இருக்கிறது. இன்று மட்டும் அதானி எண்டர்பிரைசசின் பங்குகள் 2 சதவிகதம் உயர்ந்துள்ளது. ஃபார்மா நிறுவனங்களின் பங்குகள் 0.55 சதவீதமும், மீடியா மற்றும் ஹெல்த்கேர் நிறுவன பங்குகள் 0.51 சதவீதமும் உயர்ந்துள்ளது.

அதானி எண்டர்பிரைசஸ், சன் பார்மா, டாக்டர் ரெட்டிஸ், கோட்டக் மஹிந்திரா வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், பவர்கிரிட், டைட்டன், பஜாஜ் ஃபைனான்ஸ், நெஸ்லே இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. ஹிண்டால்கோ, விப்ரோ, ஐசிஐசிஐ பேங்க், ஹெச்சிஎல் டெக், அல்ட்ராடெக் சிமெண்ட், எம்&எம், பஜாஜ் ஃபின்சர்வ், இண்டஸ்இண்ட் பேங்க், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க், இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.