சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் வழிகிறதா ..? சரிசெய்ய சிம்பிள் ஹோம் டிப்ஸ்

சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்க வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களே போதுமானது அவை என்னென்ன, எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

எண்ணெய் பசை சருமம் பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. எண்ணெய் பசை சருமம் இருப்பவர்கள் முகம் எப்போதும் சோர்வாகவே காணப்படும். இதனால் மார்க்கெட்டில் கிடைக்கும் க்ரீம்களை பலரும் வாங்கி பயன்படுத்துகின்றனர். நாளடைவில் இதனால் சரும பாதிப்புகள் ஏற்படுகிறது. ஆனால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்க வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களே போதுமானது அவை என்னென்ன, எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

தேன் : தேன் தோல் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் நீக்க உதவுகிறது. வறண்ட சருமம் இருப்பவர்கள் மட்டுமே தேன் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது, ஆனால் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கும் தேன் சிறந்த பலனை தருகிறது. தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் பண்புகள் எண்ணெய் பசையால் உருவாகும் பருக்களை நீக்க உதவுகிறது. ஒரு ஸ்பூன் தேனை எடுத்து உங்க முகத்தில் தடவுங்கள், 10 நிமிடங்கள் நன்கு உலர விட்டு அதன் பின்னர் சாதாரண தண்ணீரில் கழுவவும்.

ஓட்ஸ் : ஓட்ஸ் உங்கள் சருமத்தில் இருந்து அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சுவதற்கு உதவும் ஒரு இயற்கை மூலப்பொருள் ஆகும். மேலும் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி பொலிவாக்கிறது. ஓட்ஸை நன்கு பொடித்து, இதனுடன் தயிர், தேன் அல்லது வாழைப்பழம், ஆப்பிள், பப்பாளி போன்றவற்றுடன் சேர்த்து பயன்படுத்துங்கள்.

எண்ணெய் பசை நீங்க – 1/2 கப் அரைத்த ஓட்ஸை வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து பேஸ்ட் செய்யவும். இதனுடன் 1 ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கழுவவும். இப்போது, ​​இந்த ஓட்ஸ் கலவையை உங்கள் முகத்தில் தடவி சுமார் மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்னர், வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இப்படி வாரம் ஒரு முறை செய்து வந்தால் எண்ணெய் பசை நீங்கும்.

எலுமிச்சை சாறு மற்றும் முட்டை : முட்டை வெள்ளைக்கரு மற்றும் எலுமிச்சை சாறு இரண்டும் உங்கள் சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை குறைக்க உதவுவது மட்டுமின்றி, சரும துளைகளின் அளவை குறைக்கிறது. இதனால் ஓபன் போர்ஸ் பிரச்னை இருப்பவர்களும் இதனை முயற்சி செய்யலாம். குறிப்பாக எலுமிச்சையில் உள்ள அமிலம் அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சுகிறது. இதற்கு ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் எடுத்து அதனுடன் தேவையான அளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து உங்கள் முகத்தில் தடவவும். நன்கு உலர்ந்த பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

தக்காளி : தக்காளியில் சாலிசிலிக் அமிலம் நிறைந்துள்ளது. இது சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை கட்டுப்படுத்தி பருக்கள் வருவதை தடுக்கிறது. மேலும் பருக்கலாம் உருவான தழும்புகளை மறைய செய்யவும் தக்காளி வேலை செய்கிறது. தக்காளியை எடுத்து இரண்டாக வெட்டி ஒரு துண்டை எடுத்து உங்கள் சருமத்தில் வட்ட வடிவில் மெதுவாக மசாஜ் செய்யவும். விருப்பப்பட்டால் தக்காளியின் மேல் சர்க்கரை தடவியும் மசாஜ் செய்யலாம். பின்னர் அப்படியே உலர செய்து வாஷ் செய்து வந்தால் சரும பிரச்சனைகள் நீங்கி பொலிவாகும்.

பாதாம் : பாதாம் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்க மட்டுமின்றி, அழுக்குகளை நீக்கவும் உதவுகிறது. பாதாமை 8 மணி நேரம் ஊறவைத்து நன்கு அரைத்து கொள்ளவும், இதனுடன் 2 தேக்கரண்டி தேன் சேர்த்து முகத்தில் தடவவும். 5 நிமிடம் நன்கு மசாஜ் செய்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை விட்டு பின்னர் நீரில் கழுவவும். தேன் சேர்ப்பதற்கு பதிலாக ரோஸ் வாட்டர் சேர்த்தும் பயன்படுத்தலாம்.

கற்றாழை : கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி எண்ணெய் பசை சருமத்தினர் தினமும் செய்து வந்தால், சருமத்தில் எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்படுவதோடு, சருமத்தின் நிறமும் மேம்படும்.