சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் அணியை வெளிநாட்டு கிரவுண்டில் வெற்றி கொடி நாட்ட கடுமையாக போராடியவர்.
இவர் தலைமையிலான அணி தான் வெளிநாட்டில் இந்தியா எப்படி வெற்றி பெற வேண்டும் என்ற வழிமுறையை எழுதியது. இன்றும் லாட்ஸ் மைதானத்தில் தங்க சவுரவ் கங்குலி சட்டையை கழற்றி சுத்தியதை பார்க்கும் போது பலருக்கும் மெய்சிலிர்க்கும். 80-களின் பிற்பகுதியில் பிறந்தவர்களுக்கும், 90ஸ் கிட்ஸ்-க்கும் சவுரவ் கங்குலி-பெரிய ஹீரோவாக இருந்தார். சச்சின்-க்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தாலும் சவுரவ் கங்குலி மீது பெரிய மரியாதை கிரிக்கெட் ரசிகர்களுக்கு உள்ளது. இன்று 51வது பிறந்தநாள்-ஐ கொண்டாடும் சவுரவ் கங்குலி முக்கியமான காரியத்தை செய்துள்ளார்.
தோனி, கோலி, சச்சின், சேவாக், யுவராஜ் சிங் என பலரும் பல வர்த்தகத்தில் முதலீடு செய்துள்ள நிலையில் சவுரவ் கங்குலி-யும் தனது முதலீட்டு ஆட்டத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளார்.
இந்தியாவில் தற்போது உணவு டெலிவரி சேவை துறை வேகமாக வளர்ச்சி அடையும் வேளையில், இத்துறையில் இயங்கி வரும் ஜஸ்ட்மைரூட்ஸ் (JustMyRoots) என்ற உணவு டெலிவரி ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். இதுமட்டும் அல்லாமல் இந்த நிறுவனத்திற்கு விளம்பர தூதராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்தியாவில் உணவு டெலிலரி துறையில் பெரிய அளவிலான ஆதிக்கம் கொண்டிருக்கும் Zomato மற்றும் Swiggy போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு போட்டியாகவும், இவ்விரு நிறுவனங்கள் பெரிய அளவில் வர்த்தகம் பார்க்காத பிரிவில் இயங்கும் ஜஸ்ட்மைரூட்ஸ் (JustMyRoots) நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார் சவுரவ் கங்குலி. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி குருகிராம்-ஐ தலைமையிடமாக கொண்டு intercity food delivery service அதாவது நகரங்களுக்கு மத்தியிலான உணவு டெலிவரி சேவை அளிக்கும் ஜஸ்ட்மைரூட்ஸ் (JustMyRoots) நிறுவனத்தில் அறிவிக்கப்படாத முதலீட்டை செய்துள்ளார்.
ஜஸ்ட்மைரூட்ஸ் நிறுவனம் ஐஐஎம் முன்னாள் மாணவர் சமிரன் சென்குப்தா, அவரது மனைவி ப்ரோமிதா சென்குப்தா மற்றும் மூன்றாவது இணை நிறுவனரான ராஜன் சச்தேவா ஆகியோர் இணைந்து 2016 ஆம் ஆண்டில் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தை துவங்கினர். ஜஸ்ட்மைரூட்ஸ் நிறுவனம் தற்போது நகரங்களுக்கு இடையே உணவு விநியோக சேவையை சுமார் 30 நகரங்களில் வழங்குகிறது, ஆனால் சொந்தமாக பேகேஜிங் சேவைகளை உருவாக்கும் முயற்சியில் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக 120 முதல் 150 கோடி ரூபாய் வரையிலான முகலீட்டை திரட்ட ஜஸ்ட்மைரூட்ஸ் நிறுவனர்கள் கடந்த சில மாதங்களாக முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் சவுரவ் கங்குலி பிறந்தநாளான ஜூலை 8 ஆம் தேதி ஜஸ்ட்மைரூட்ஸ் நிறுவனத்தின் முதலீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.