சாப்பிட்ட உடனே பசிக்கிறதா? இதன் அறிகுறிகளாக இருக்கலாம்.. ஜாக்கிரதை!

ஒட்டுண்ணிகளுக்கு முறையான சிகிச்சை எடுக்காவிட்டால் சோர்வு மற்றும் மூட்டு பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

வயிறு நிறைய சாப்பிட்டவுடன் அப்போதே அல்லது சிறிது நேரத்துக்குள்ளாகவே பசிக்கும் உணர்வு ஏற்படுவதுண்டு. இதற்கு பொதுவான காரணம் குடல் ஒட்டுண்ணிகள். ஒட்டுண்ணிகள் என்பவை உடலிலிருந்து அவற்றுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொண்டு செழித்து வாழக்கூடியவை. செரிமான பகுதியான குடல் சுவர்களில் தங்கி மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை இவை. இதனால் பசியுணர்வையும் தாண்டி பிற அறிகுறிகளும் தென்படும்.

குடல் ஒட்டுண்ணிகள் உருவாக காரணம் என்ன?
கீழ்க்கண்ட காரணங்களால் பல்வேறு வகையான புழுக்கள் குடல் ஒட்டுண்ணிகளாக உருவாகின்றன.

  1. கழிவறையை பயன்படுத்திய பிறகு கைகளை கழுவாமை போன்ற மோசமான சுகாதாரத்தை பின்பற்றுதல்
  2. சாப்பிடும் முன்பு பழங்கள் மற்றும் காய்கறிகளை சுத்தமாக கழுவாமை
  3. சமைக்காத இறைச்சியை சாப்பிடுதல்

இதனால் உருவாகும் ஒட்டுண்ணிகளுக்கு முறையான சிகிச்சை எடுக்காவிட்டால் சோர்வு மற்றும் மூட்டு பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

குடல் ஒட்டுண்ணிகளின் அறிகுறிகள்:
திடீர் எடை குறைவு

ஒட்டுண்ணிகள் குடல் ஒட்டி வாழ்ந்து, செரிமானத்தின்போது உணவை உறிஞ்சிக்கொள்கின்றன. இதனால் நோயாளிக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்னைகள் ஏற்படும். பெரும்பாலான ஊட்டச்சத்துக்களை ஒட்டுண்ணிகள் உறிஞ்சிக்கொள்வதால் திடீரென உடல் எடை குறைந்துவிடுகிறது

சாப்பிட்டவுடன் பசி

ஒட்டுண்ணி புழுக்கள் உணவுகளிலுள்ள ஊட்டச்சத்துக்களை உடனடியாக சாப்பிட்டு விடுவதால் உணவு சாப்பிட்டவுடன் பசி உணர்வு ஏற்படுகிறது. இந்த ஒட்டுண்ணிகள் மெட்டபாலிசம் மற்றும் பசியுணர்விலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அனீமியா (ரத்தசோகை)

குடல் ஒட்டுண்ணிகளுடன் தொடர்புடையது ரத்தசோகை. குறிப்பாக கொக்கிப்புழுக்களால் ரத்தசோகை ஏற்படுகிறது. இந்த புழுக்கள் சிறுகுடலில் ஒட்டிக்கொண்டு அதிலிருந்து ரத்தத்தை உறிஞ்சுவதால் ரத்த இழப்பு ஏற்பட்டு அனீமியாவுக்கு வழிவகுக்கிறது. புது ரத்த செல்கள் உருவாவதற்கு உறுதுணையாக இருக்கும் இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய சத்துக்களைக்கூட சில புழுக்கள் உறிஞ்சிவிடுகின்றன.

அரிப்புத்தன்மை

குடல் ஒட்டுண்ணிகளால் உடலில் அரிப்பு பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஊசிப்புழுக்கள் ஆசனவாயைச் சுற்றி முட்டையிடுகின்றன. இது அசௌகர்யத்தை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல் தொற்றை அதிகப்படுத்தவும் மீண்டும் தொற்று உருவாகவும் வழிவகுக்கிறது. பிற ஒட்டுண்ணி புழுக்களும் நச்சுக்களை வெளியேற்றி சரும பிரச்னைகள் மற்றும் படை, எக்ஸிமா அழற்சி போன்றவற்றுக்கும் வழிவகுக்கிறது.

மூட்டு வலி

ஒட்டுண்ணிகளால் அழற்சி ஏற்படுவதால் மூட்டு மற்றும் தசைவலி ஏற்படுகிறது. சில நேரங்களில் இந்த ஒட்டுண்ணிகள் தசைகளுக்கும் பரவி மேலும் சேதத்தை ஏற்படுத்துகிறது. இது பெரும்பாலும் அனீமியாவின் பின்விளைவாக இருக்கலாம்.