சிக்கன்குனியா காய்ச்சலுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு!

சிக்கன்குனியா காய்ச்சலுக்கு அமெரிக்காவில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லான்செட் ஜர்னல் மருத்துவ ஆய்வு இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொசுக்களினால் பரவு சிக்கன்குனியா நோய் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதுவும் அமெரிக்கா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சிக்கன்குனியா நோய் தாக்கம் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. சிக்குன்குனியா நோய் பாதித்தால் 4 முதல் 8 நாட்களுக்கு கடுமையான காய்ச்சல் இருக்கும். தலைவலி, சோர்வு, வாந்தி, தசை மற்றும் மூட்டு வலி ஏற்படும். இந்த நோய் பாதித்த ஒருவருக்கு மூட்டுவலி மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் கூட தொடரும். சிக்குன்குனியாவால் உயிரிழப்பு அதிகம் இல்லை.

முக்கியமாக வயதானவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இப்படியான பாதிப்புகள் அதிகம் உள்ள நோய்க்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்காமல் இருந்தது. இந்நிலையில், சிக்குன்குனியா நோய்க்கு விஎல்ஏ-1553 என்ற தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசியை ஒரு தவணை செலுத்தினால் போதும். இந்த தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என்று லான்செட் ஜர்னல் மருத்துவ ஆய்வு இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியை பிரான்சை சேர்ந்த பயோடெக் நிறுவனமான வால்நேவா தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசியை செலுத்தியவுடன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாகவும், திடீரென சிக்குன்குனியா நோய் அதிக அளவில் பரவினால் அதை கட்டுப்படுத்த இந்த தடுப்பூசி உதவும் என்றும், வயதானவர்களுக்கு இந்த தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்றும் தடுப்பூசி நிறுவனத்தின் மேலாளர் மார்டினா ஷினைடர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் 43 இடங்களில் 4,115 இளைஞர்களுக்கு விஎல்ஏ-1553 தடுப்பூசியை செலுத்தி சோதனை நடத்தப்பட்டது. அதில் ஒரு வாரம், 28 நாட்கள், 3 மாதம், 6 மாதம் இடைவெளியில் நோய் எதிர்ப்பு சக்தி பரிசோதிக்கப்பட்டது. ஒரு முறை செலுத்தப்பட்ட தடுப்பூசியிலேயே 99 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது தெரியவந்தது. ஆனால், குறைவான நோய் எதிர்ப்பு சக்தி உடையவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி சோதனை செய்து வருகிறது பிரேசில். அதற்கு பின்னரே அவர்களுக்கு சிக்கன்குனியா தடுப்பூசி செலுத்துவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.