தமிழ்நாட்டைச் சேர்ந்த 38 வயதான ஆசிரியை முத்தமிழ்ச்செல்வி எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியைத் தொட்டு சாதனை படைத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டியைச் சேர்ந்தவர் 38 வயதான முத்தமிழ்ச்செல்வி. இவர் தற்போது கணவன் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வருகிறார். மேலும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
முத்தமிழ்ச்செல்விக்கு சிறு வயது முதலே எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைக்க வேண்டும் என்ற கனவு இருந்திருக்கிறது. அவரது அந்தக் கனவை தன்னுடைய குடும்பத்தினரிடம் தெரிவித்திருக்கிறார். அவர்கள் முழு மனதுடன் ஒத்துழைப்புக் கொடுக்கவும், அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்நிலையில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு பொருளாதார ரீதியாக உதவி செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். அவரது கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் 15 லட்சம் ரூபாய் நிதி வழங்கியிருக்கிறார். மேலும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 10 லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறார்.
கடந்த மே 17ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தை ஏறத் தொடங்கி இருக்கிறார் முத்தமிழ்ச்செல்வி. நேற்று எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து இந்தியக் கொடியை அங்கே பறக்கவிட்டு சாதனை படைத்திருக்கிறார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இரண்டு குழந்தைகளுக்கு தாயா முத்தமிழ்ச்செல்வி 38 வயதில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியைத் தொட்டு ‘எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழ்ப்பெண்” என்ற சாதனையை படைத்திருக்கிறார்.