சிங்கப்பூரில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். சிங்கப்பூரில் தொழில்நிறுவனங்களுடன் 6 ஒப்பந்தங்கள் கையழுத்தாகின.

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நேற்று Temasek, Sembcorp, CapitaLand ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்கள் மற்றும் சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்குப் பிறகு முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூர் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை நிறுவனத்திற்கும் இடையே ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு, பல்கலைக்கழக ஒத்துழைப்பு, அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு, தமிழ்நாட்டில் தொழில்துறைகளின் ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு ஆதரவு போன்றவற்றில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த முதலீட்டாளர் மாநாட்டில் 250-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அரசின் சிப்காட் நிறுவனத்திற்கும் இடையே பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சியில் ஒத்துழைப்பை ஏற்படுத்துதல் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகத்திற்கும், தமிழ்நாட்டின் பேம் டி.என். மற்றும் டான்சிம் நிறுவனங்களுக்கும் இடையே தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப தொடர் கல்விக்கான திறன் மேம்பாடு, ‘ஸ்டார்ட்அப் டி.என்.’ மூலம் ‘ஸ்டார்ட்-அப்’ பொருளாதார செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு கூட்டாண்மைகளை எளிதாக்குதல் போன்றவற்றிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூரை சேர்ந்த ‘ஹய்-பி இன்டர்நேஷனல்’ நிறுவனத்திற்கும் இடையே ரூ.312 கோடி முதலீடு மற்றும் 700 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மின்னணு பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கும், சிங்கப்பூரை சேர்ந்த ஐ.டி.இ. கல்வி சேவைகள் நிறுவனத்திற்கும் இடையே தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி துறையில் நீண்ட கால கூட்டாண்மையை நிறுவுதல், தமிழ்நாட்டில் தொழிற்சாலை திறன் பள்ளிகளை அமைத்தல் மற்றும் மேலாண்மை செய்தல் போன்றவற்றிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சிங்கப்பூரை நாங்கள் வெளிநாடாக நினைப்பது இல்லை. ஏனென்றால் எங்களது தாய்மொழியாம் தமிழ்மொழி, ஆட்சி மொழியாக இருக்கும் நாடு சிங்கப்பூர். சிங்கப்பூருக்கும், தமிழ்நாட்டிற்கும் தொன்று தொட்டே சிறப்பான உறவு உள்ளது. சிங்கப்பூரின் அனைத்து அரசு பள்ளிகளிலும் தொடக்கநிலை முதல் இளநிலை கல்லூரி நிலை வரை தமிழ் 2-வது மொழியாக கற்பிக்கப்படுகிறது என்பது தமிழ்ப்பேச்சே எங்கள் மூச்சு என்று வாழ்ந்து வரும் எங்களுக்கு ‘தேன் வந்து பாயுது எங்கள் காதினிலே’ என்பதைப் போன்ற இனிய செய்தி.

சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஈஸ்வரன் சென்னை வந்தபோது, என்னைச் சந்தித்தார். அவரது பண்பினால் மகிழ்ந்து போன நான், அடுத்த பயணமாக சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டேன். அவர் என்னைச் சந்தித்தபோது தமிழ்நாடு மற்றும் சிங்கப்பூர் இடையிலான பொருளாதார உறவுகள், பண்பாடு மற்றும் வர்த்தகம் பற்றி மிக விரிவாக பேசினோம். 30 சிங்கப்பூர் நிறுவனங்கள் தமிழ்நாட்டின் முக்கிய முதலீட்டாளர்களில் சிங்கப்பூரும் ஒன்று என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 30 சிங்கப்பூர் நிறுவனங்கள் உள்ளன.

அசெண்டாஸ் நிறுவனம், தரமணியில் ஒரு மிகப்பெரும் ஐ.டி. பார்க் நிறுவியுள்ளது. டமாசெக், டி.பி.எஸ். வங்கி, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் மேப்பில் டிரி போன்ற பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் வணிகம் புரிந்து வருகின்றன. சிங்கப்பூரை மையமாக கொண்ட நிறுவனங்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். கடந்த 2 வருடங்களில் தமிழ்நாட்டில் பல்வேறு துறை சார்ந்த முதலீட்டு ஊக்குவிப்பு நிகழ்வுகளை நடத்தி, இதுவரை 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளன.

இதன் மூலம் ரூ.2 லட்சத்து 95 ஆயிரத்து 339 கோடி அளவுக்கு முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. 4 லட்சத்து 12 ஆயிரத்து 565 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உறுதியளிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டுமே ரூ.4 ஆயிரத்து 800 கோடி முதலீட்டில் 4 சிங்கப்பூர் நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. இதன் மூலம் 6 ஆயிரத்து 200 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இன்னும் பல திட்டங்களுக்கு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சிறப்பு என்னவென்றால், பல்வேறு வகைப்பட்ட நிறுவனங்களும் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதுதான். மின் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் போன்ற புதிய துறைகளிலும் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. எங்கள் மாநிலத்தின் சீரான மற்றும் பரவலான வளர்ச்சியை உறுதிசெய்யும் விதமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இந்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

துறைகளுக்கான கொள்கை நாங்கள் ஒவ்வொரு துறையையும் நன்கு ஆராய்ந்து, அத்துறைகள் சார்ந்து முதலீடு செய்யும் நிறுவனங்களுடன் ஆலோசனைகள் மேற்கொண்டு, அவர்கள் தேவைகளை கண்டறிந்து நிறைவு செய்திடும் வகையில், பல்வேறு துறைகளுக்கான கொள்கைகளை வெளியிடுகிறோம். எங்கள் மாநிலத்தில் பின்டெக் சிட்டி அமைப்பது போன்ற திட்டங்களை செயல்படுத்திட, உங்களின் இந்த ஆற்றலும், அனுபவமும் எங்களுக்கு மிகவும் தேவை.

அதேசமயம் உங்களது வர்த்தக வரம்புகளும் விரிந்து பரவும்; பெருகும். தொழில் பூங்காக்கள் மேம்பாடு, தொழில் நகரியங்கள், தொழில் பெருவழித் தடங்கள், துறைமுகங்களை மேம்படுத்துதல், நகர்ப்புற உள்கட்டமைப்பு, கழிவுநீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை, கடல்நீரை நன்னீராக்கும் திட்டம், சுற்றுலா தொடர்பான திட்டங்கள் ஆகியவற்றில் சிங்கப்பூரின் ஒத்துழைப்பு தமிழ்நாட்டிற்கு மிக அவசியம் என்பதை சொல்ல விரும்புகிறேன். எங்களது முன்னேற்ற பயணத்தில் இணைந்து, அதற்கான திட்டங்களை செயல்படுத்த சிறப்பான பங்குதாரராக சிங்கப்பூர் கைகோர்த்திட வேண்டும் என்றும் உங்களை கேட்டுக்கொள்கிறோம்.

முதலீட்டுக்கு உகந்த மாநிலம் இப்போது தமிழ்நாட்டில் முதலீட்டுக்கு உகந்த சூழ்நிலை மிக பிரகாசமாக இருக்கிறது. வளர்ந்த நாடுகள் மட்டுமல்ல, வளர்ந்து வரும் நாடுகளும் இந்தியாவில் முதலீடு செய்ய முன் வருகின்றன. இத்துறைகளில், உங்களின் மேலான முதலீடுகளை நாங்கள் வரவேற்கிறோம். இன்றைய தினம், சிப்காட் மற்றும் சிங்கப்பூர் இந்தியா கூட்டுத்திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாகி உள்ளது.

இதன் மூலம் தரமான உள்கட்டமைப்புக்கான கொள்கைகள் மற்றும் அளவுகோல்களை உருவாக்குதல், சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்துதல், கழிவுநீர் மேலாண்மை, மலிவு விலையில் இல்லங்கள், உள்கட்டமைப்பு அமைப்பதற்கான நிதி வசதி, பசுமை மயமாக்கல் மற்றும் பசுமைக் கட்டிடங்கள் போன்றவற்றை மேம்படுத்தி, அதன் மூலம், தொழில் பூங்காக்களின் தரத்தினை வெகுவாக மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். வந்தாரை வாழ வைத்த சிங்கப்பூர் எங்கள் தமிழ்நாட்டுக்கு வந்தும் வளப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என பேசினார்.