சிறை தண்டனைக்கு தடை விதிக்க கோரிய ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு தடைவிதிக்க கோரிய மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சூரத் நீதிமன்றம்.

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி, மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது குஜராத் எம்.எல்.ஏ பூர்னேஷ் மோடி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் அவருக்கு சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. அதனை காரணமாக வைத்து ராகுல்காந்திய மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

அந்த விவகாரம் இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், ராகுல்காந்திக்கு வழங்கப்பட்டு இருந்த அரசு சலுகளைகள் அனைத்தும் ரத்து செய்யபப்ட்டன. அவர் தங்கிருந்த அரசு இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்தச் சூழலில் அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கடந்த 3-ம் தேதி சூரத் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதனுடன், தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ஒரு மனுவும், மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும்வரை, குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி மற்றொரு மனுவும் தாக்கல் செய்தார்.

இந்த இரண்டு மனுக்களையும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது. ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்த தீர்ப்புக்கு இடைக்கால தடைவிதிக்கக் கோரும் மனு மீது கடந்த வாரம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கு சூரத் நீதிமன்றம் கூடுதல் நீதிபதி முகாராவ் தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்று முடிந்தது. வழக்கு விசாரணையின்போது, 2019-ம் ஆண்டு தேர்தலில் பேசிய பேச்சு கண்டிக்கதக்கது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அவரது தண்டனையை ரத்து செய்ய முடியாது என்று தீர்ப்பளித்தனர்.