சீன ராணுவத்தை கேலி செய்ததாக காமெடிக் குழுவுக்கு 17 கோடி ரூபாய் அபராதம்…

சீனாவில் காமெடி குழு ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் சீன ராணுவத்தை கேலி செய்ததாக அக்குழுவுக்கு 17 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சீன நாட்டின் ஷாங்காய் நகரில் ஷியாகோ என்ற ஊடக குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஊடக குழு அந்நகரத்தில் இளம் கலைஞர்களை வைத்து நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் இந்தக் குழு பீஜிங்கில் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறது. அப்போது அந்தக் குழுவைச் சேர்ந்த நடிகர் லி ஹாஷி என்பவர், ‘தான் வளர்க்கும் நாய்கள், அணிலை துரத்துவதைப் பார்க்கும்போது அவற்றுக்குப் போர்களை வெல்லும் திறன் இருக்கிறது.’ என பேசியிருக்கிறார்.

இந்த விவகாரம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. பலரும் சீன ராணுவத்தைதான் லி ஹாஷி அப்படி பேசுகிறார் என விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், இது தொடர்பான புகாரின் மீது வழக்கு பதிவு செய்த சீன கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சகம், ஷியாகோ குழுவினர் தேசிய உணர்வுகளை அவமதித்துவிட்டதாக கூறி அந்தக் குழுவுக்கு ரூ.17 கோடி அபராதம் விதித்திருக்கிறது. இதனால் தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார் நடிகர் லி ஹாஷி.