சூளகிரி பகுதியில் கம்பு மகசூல் 50% அதிகரிப்பு – விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

சூளகிரி பகுதியில் கம்பு மகசூல் 50% அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரிபரவலாக பெய்த மழையால், சூளகிரி பகுதியில் வழக்கத்தை விட கம்பு மகசூல் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், விலையும் உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், வேப்பனப்பள்ளி, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, சூளகிரி, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மானாவாரி நிலங்களில் கம்பு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கம்புக்கு விதைப்பு முதல் அறுவடை வரை தண்ணீர் இருந்தால்போதும் என்பதால், விவசாயிகள் கம்பு சாகுபடியில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிகழாண்டில், பரவலாக பெய்த மழையால், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் விதைக்கப்பட்ட கம்பு நன்கு விளைந்து தற்போது அறுவடை பணி நடைபெற்று வருகிறது.

மேலும், கடந்தாண்டைப்போல நிகழாண்டிலும் 50 சதவீதம் மகசூல் அதிகரித்துள்ளது. தரத்தைப் பொறுத்து விலையும் உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 இதுதொடர்பாக சூளகிரி பகுதி விவசாயிகள் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழாண்டில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் கம்பு சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணி நடைபெற்று வருகிறது. கம்பு நடவுப் பணியைப் பொறுத்தவரை நீர்ப்பாசன பகுதியில் ஒரு ஏக்கருக்கு 800 கிலோ முதல் ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்கும். மானாவாரியில் 600 கிலோ முதல் 800 கிலோ வரை மகசூல் கிடைக்கும். ஊட்டச்சத்து மாவு தயாரிப்பு மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் கம்பின் தேவை அதிகம் இருப்பதால், சந்தையில் ஆண்டும் முழுவதும் கம்புக்கு வரவேற்பு உள்ளது.

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் கம்பை வாங்க வியாபாரிகள், போச்சம்பள்ளி, குந்தாரப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி பழையபேட்டை சந்தைக்கு வருகின்றனர்.

மேலும், சில வியாபாரிகள் விவசாயிகளின் தோட்டத்துக்கு நேரடியாக வந்து கொள்முதல் செய்கின்றனர்.

கடந்தாண்டு ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.30-க்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது, தரத்தைப் பொறுத்து கிலோ ரூ.30 முதல் ரூ.50 வரை கொள்முதல் செய்கின்றனர்.