சென்னையின் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி

சென்னையின் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

சென்னை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. இதனிடையே, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் சூறைகாற்றுடன் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. கிண்டி, மீனம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, எழும்பூர், சேத்துப்பட்டு, நூங்கம்பாக்கம், வேளச்சேரி, ஈக்காட்டுதாங்கல் உள்பட சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை நீடித்து வருகிறது. இந்த நிலையில், தொடர்மழை காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கத்திப்பாரா மேம்பாலத்தில் கீழ் உள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னை, வேப்பேரியில் சாலைகளின் இருபுறமும் மழைநீர் தேங்கியுள்ளது. தாம்பரம் மாநகராட்சி சுரங்க பாலங்களில் அதிகாலை 2.30 மணி முதல் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சுரங்க பாலங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். அண்ணா சாலையில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.