சென்னை மெட்ரோ இரயிலில் பயணம் செய்யாமல் பார்க்கிங் வசதியை மட்டும் பயன்படுத்துவோருக்கு கட்டண உயர்வு – மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை மெட்ரோ இரயிலில் பயணம் செய்யாமல் வாகனங்களை மட்டும் மெட்ரோ இரயில் பார்க்கிங்கில் விடுவதால் ஏற்படும் அசெளகரியத்தை தவிர்ப்பதற்கு மெட்ரோ இரயில் நிறுவனம் கட்டணத்தை உயர்த்தி அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

மெட்ரோ இரயிலி பயணிக்கும் பயணிகள் தங்களுடைய இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களை மெட்ரோ இரயில் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு செல்வது வழக்கம் . இதற்காக இருசக்கர வாகனங்களுக்கு 6 மணி நேரத்திற்கு 10 ரூபாயும். 12 மணி நேரத்திற்கு 15 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், மெட்ரோ இரயில் நிர்வாகம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில், “மெட்ரோ ரயிலில் பயணிக்காமல் நிலையத்தில் உள்ள பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்திச் செல்பவர்களால் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது.

இதனால், மெட்ரோ இரயில் பயணிகள் வாகனத்தை நிறுத்த முடியாத நிலை உள்ளது. இதைக் கட்டுப்படுத்த மெட்ரோ ரயிலில் பயணம் செய்யாமல், மெட்ரோ நிலையத்தில் உள்ள பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டணம் நாளை (ஜூன் 14) முதல் உயர்த்தப்படுகிறது. அதன்படி, இருசக்கர வாகனங்களை நிறுத்த 6 மணி நேரத்துக்கு ரூ.20, 12 மணி நேரத்துக்கு ரூ.30, 12 மணி நேரத்துக்கு மேல் ரூ.40 எனவும், சேவை நேரத்தை கடந்தால், ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.

இதுபோல, நான்கு சக்கர வாகனங்களுக்கு 6 மணி நேரத்துக்கு ரூ.30,12 மணி நேரத்துக்கு ரூ.40, சேவை நேரத்தை கடந்தால் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். அதே நேரம், மெட்ரோ இரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு முந்தய கட்டணமே தொடரும். அவர்களுக்கு கட்டண தள்ளுபடியும் வழங்கப்பட உள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண அட்டையைப் பயன்படுத்தி, வாகனங்களை நிறுத்தி, மெட்ரோ ரயிலில் பயணம் செய்துவிட்டு, அதேநாளில் வாகனத்தை திரும்ப எடுக்கும்போது, வாகனநிறுத்தம் கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.