செமிகண்டக்டர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மைக்ரான் இந்தியாவில் ரூ.6,700 கோடிமுதலீடு

இந்தியாவில் மைக்ரான் ரூ.6,700 கோடிமுதலீடு

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகின் முன்னணி செமிகண்டக்டர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மைக்ரான் டெக்னாலஜிஸ், இந்தியாவில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க 825 மில்லியன் டாலர் (ரூ.6,700 கோடி) முதலீடு செய்வதாக நேற்று அறிவித்துள்ளது.

மைக்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி மைக்ரான் நிறுவனத்தின் சிஇஓ சஞ்சய் மெஹ்ரோத்ராவை சந்தித்து உரையாடிய நிலையில், இந்தியாவில் முதலீடு செய்வது குறித்து மைக்ரான் நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறி வித்துள்ளது.

மைக்ரான் நிறுவனத்தின் ஆலைகுஜராத்தில் அமைகிறது. இந்த ஆலை 2.75 பில்லியன் டாலரில் (ரூ.22,500 கோடி) அமைக்கப்பட உள்ளது. இதில் மைக்ரான் நிறுவனம் 825 மில்லியன் டாலர் (ரூ.6,700 கோடி) முதலீடு செய்யும். மீதத் தொகையில் 50 சதவீதம் மத்திய அரசும், 20 சதவீதம் குஜராத் அரசும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு இறுதியில் இந்த ஆலை செயல்பாட்டுக்கு வரும் என்றும் இதன் மூலம் 5 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.