செயற்கை கால்கள் மூலம் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த மாற்றுத்திறனாளி!

செயற்கை கால்கள் மூலம் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த மாற்றுத்திறனாளி!

நேபாளம் மற்றும் சீன எல்லையில் இருக்கிறது எவரெஸ்ட் சிகரம். உலகிலேயே மிக உயரமான இந்தச் சிகரத்தின் உச்சியில் ஏறி பலரும் சாதனை படைத்துள்ளனர். இரண்டு கால்களும் கைகளும் உள்ள இயல்பான மனிதர்களினாலேயே இந்த சிகரத்தின் உச்சியை அடைவது என்பது பெரும் சவாலான விஷயம். இந்நிலையில், சில ஆண்டுகளாக மாற்றுத்திறனாளி நபர்கள் இந்தச் சிகரத்தின் மீது ஏறுவதால் உயிழப்புகள் ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

அதனால், 2017ம் ஆண்டு தனியாக மலை ஏறுதல், கால்களை இழந்தவர்கள், கைகளை இழந்தவர்கள், பார்வையற்றவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர், 2018ம் ஆண்டு இந்த தடைக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது விசாரணை நடத்திய நேபாள நீதிமன்றம், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது.

ஆனாலும், மாற்றுத்திறனாளிகள் பலரும் எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி சாதனை படைக்க முயற்சி செய்துவந்த நிலையில்… எவரெஸ்ட் சிகரத்தி உச்சியை அடைந்த முதல் மாற்றுத்திறனாளி நபர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் ஹரி புத்தா மகர் என்ற நபர்.

இங்கிலாந்து ராணுவத்தில் பணியாற்றிய ஹரி, 13 வருடங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் நடந்த போரில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் தனது இரண்டு கால்களையும் இழந்துள்ளார். இந்நிலையில், சாதனை படைக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்த ஹரி, செயற்கை கால்களைப் பொருத்திக்கொண்டு எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு சென்று மிகப்பெரிய சவாலான சாதனையை செய்திருக்கிறார். இந்த மிகப்பெரிய சவாலைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

ஏப்ரல் 17ம் தேதி மலையை ஏறத்தொடங்கிய ஹரி, கடந்த வெள்ளிக்கிழமை மலையின் உச்சியை அடைந்துள்ளார். மோசமான காலநிலை சூழலினால் ஹரி புத்தாவுடன் சென்ற குழு மிகுந்த சிரமத்தை சந்தித்திருக்கிறது. உறைபனியில் சிக்கி ஹரி புத்தாவின் செயற்கை கால்கள், கண்ணாடி உள்ளிட்ட அனைத்து பொருட்களுமே பனிக்கட்டியாக மாறிப்போயிருக்கிறது. மலையேற்றத்தின்போது ஆங்காங்கே சடலங்களும் கிடந்திருக்கிறது.

அதனை எல்லாம் பார்த்து, ஹரி புத்தாவுடன் வந்து குழு திரும்ப சென்றுவிடலாம் என எச்சரித்திருக்கிறது. ஆனாலும், அவர் எடுத்த முயற்சியில் இருந்து பின் வாங்காமல், உறைபனியும் காலநிலையும் சற்று சரியாகும் வரை பேஸ் கேம்ப்பில் காத்திருந்து, பின்னர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்திருக்கிறார். ஆக்ஸிஜன் பற்றாக்குறையினால் மூச்சு திணறிய நிலையில், உடன் சென்ற குழுவினர் அவரைக் காப்பாற்றியுள்ளனர். கிட்டத்தட்ட தன்னுடைய உயிரையும் பணையம் வைத்து இந்த சாதனையை செய்திருக்கிறார் ஹரி புத்தா.