சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் சாத்தூர்ராமச்சந்திரன் 12 ஆண்டுகளுக்குப்பின் விடுவிப்பு.!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் உரிய வருவாய் ஆதாரங்களை தாக்கல் செய்ததால், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி உட்பட 3 பேரை வழக்கில் இருந்து விடுவித்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த 2006 – 2011 திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.44 லட்சம் சொத்து சேர்த்ததாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, மற்றும் சண்முகமூர்த்தி ஆகியோர் மீது கடந்த 2012-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். வழக்கு விசாரணை ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி கடந்த 2016-ம் ஆண்டு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார். அதில் லஞ்ச ஒழிப்புத்துறை சில வருவாய் ஆதாரங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை எனக் கூறி, 28 வருவாய் விவரங்களை தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அதன்பின் மீண்டும் மாவட்ட நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தாக்கல் செய்த 28 வருவாய் விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி அதில் 10 வருவாய் இனங்களை ஏற்றுக் கொண்டனர்.

இந்த வழக்கு இன்று மாவட்ட நீதிபதி திலகம் முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி மற்றும் சண்முக மூர்த்தி ஆகியோரை சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவித்து நீதிபதி திலகம் உத்தரவிட்டார்.