டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் இழப்பீடு – இரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

ஒடிசாவில் விபத்து ஏற்பட்ட இரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்து விபத்தில் சிக்கியவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என இரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

ஒடிசாவில் ஏற்பட்ட இரயில் விபத்தில் 275 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 1000க்கும் அதிகமானவர்கல் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் விபத்து ஏற்பட்ட இரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம், சிறிய காயங்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா கூறியபோது, “உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய பயணிகள் டிக்கெட் எடுக்காமல் பயணித்திருந்தாலும் அவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும். மருத்துவமனையில் உறவினர்கள் உதவியின்றி சிகிச்சை பெறுபவர்களுக்கு உதவிட அரசு சார்பில் ஒருவர் உடன் உள்ளார்.

மேலும், 139 என்ற ஹெல்ப்லைன் எண் மூலம் மூத்த ரயில்வே அதிகாரிகள் அழைப்புகளுக்கு பதிலளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காயமடைந்த அல்லது இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எங்களை தொடர்பு கொண்டால் அவர்கள் நேரில் வர ஏற்பாடுகள் செய்யப்படும். பயணம் மற்றும் பிற செலவுகளை நாங்களே கவனித்துக்கொள்வோம்.” என தெரிவித்தார்.