டெல்லி அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா – மக்களவையில் எதிர்ப்புக்கிடையே தாக்கல்!

டெல்லி அரசு அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் மசோதா மக்களவையில் இன்று கடும் எதிர்ப்புக்கிடையே தாக்கல் செய்யப்பட்டது.

டெல்லியில் அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே உண்டு என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து சில சட்ட திருத்தங்கள் மேற்கொண்டு, துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் என மத்திய அரசு அவரச சட்டம் பிறப்பித்தது. இந்நிலையில், அவசரச் சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டம் இயற்றும் நோக்கில் அதற்கான மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார்.

இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, என்.கே. பிரேமசந்திரன், சசி தரூர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “டெல்லி யூனியன் பிரதேசம் தொடர்பாக சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது. டெல்லி தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற முடியும் என்று உச்ச நீதிமன்றமும் தெரிவித்திருக்கிறது. இந்த பின்னணியிலேயே மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காகவே எதிர்க்கட்சிகள் மசோதாவை எதிர்க்கின்றன” என தெரிவித்தார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த மசோதாவுக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த மசோதா தொடர்பாக மக்களவையில் பேசிய அக்கட்சியின் எம்பி பினாகி மிஸ்ரா, “சட்டத்துக்கு உட்பட்டே இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது. இந்த மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் வாக்களிக்கலாம். ஆனால், இது சட்டப்படியானது அல்ல என கூற முடியாது” என குறிப்பிட்டார்.