டோனி அரசியலுக்கு வர வேண்டும் – பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா ட்வீட்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் டோனி அரசியல் களத்தை கருத்தில் கொள்ள வேண்டும்” என கருத்து கூறியிருகிறார் பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா.

நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்று கோப்பையை தட்டிச் சென்றது. இந்நிலையில், “இதுதான் என்னுடைய கடைசி ஐபிஎல் போட்டி என முடிவு செய்திருந்தேன். ஆனால், ரசிகர்களின் விருப்பத்திற்காக அடுத்த ஆண்டு விளையாடுவேன்” என மகேந்திர சிங் டோனி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவரது இந்த முடிவு குறித்து பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “எல்லோரையும் போல மகேந்திர சிங் தோனி மேலும் ஒரு சீசன் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடுவார் என்பதை அறிந்து நான் அக மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், என்னால் நீண்ட காலத்திற்கு அதனை எதிர்பார்க்க முடியாது. அவர் அரசியல் களத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என நான் நம்புகிறேன். அவர் எதிர்கால தலைவர். அனைவருடனும் இணக்கமாக பணியாற்றும் பண்பு, பணிவு மற்றும் புதிய உள்ளீடுகளை செய்ய விரும்பும் எண்ணமும் கொண்டவர்” என குறிப்பிட்டுள்ளார்.