ட்ரோல் எதிரொலி பிரபாஸின் பழைய போஸ்டரை நீக்கி புதியதை வெளியிட்ட ‘புராஜெக்ட் கே’ படக்குழு.!

சமூக வலைதள ட்ரோல்கள் காரணமாக பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘புராஜெக்ட் கே’ படத்தின் பழைய போஸ்டரை நீக்கிவிட்டு, புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடிக்கும் படம் ‘புராஜெக்ட் கே’. சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சயின்ஸ் ஃபிக்‌ஷன் பாணியில் உருவாகி வரும் இப்படத்தில் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

நேற்று (ஜூலை 19) இப்படத்தில் பிரபாஸின் தோற்றத்தை படக்குழு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து மோசமான கிராஃபிக்ஸ் பின்னணியுடன் போஸ்டர் வெளியாகியுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்ட பழைய போஸ்டரை படக்குழு நீக்கியுள்ளது. அதற்கு பதில் இன்று அதிகாலை, சில மாற்றங்களுடன் புதிய போஸ்டர் ஒன்று பகிரப்பட்டுள்ளது. இரண்டு போஸ்டர்களையும் ஒப்பிட்டு நெட்டிசன்களை மீம்களை பகிர்ந்து வருகின்றனர்.

‘ஆதிபுருஷ்’ படத்தின் முதல் டீசர் வெளியானபோது இதே போல மோசமான கிராபிக்ஸ் காட்சிகளுக்காக கடும் ட்ரோல்களை எதிர்கொண்டு பின்னர் பல மாற்றங்களுடன் படம் வெளியானது நினைவுகூரத்தக்கது.