தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
தேனாம்பேட்டை பண்ணை பசுமை நுகர்வோர் கடையை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தில் வழக்கமான கொள்முதலை விட 15% அதிகமாக தக்காளி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தக்காளி விலை உயர்வு மக்களை பாதிக்கும் என்பதால் விலையை கட்டுப்படுத்த முதல்-அமைச்சர் கூறினார். அதன் அடிப்படையில் தமிழகத்தில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 62 மையங்களில் கிலோ ரூ.60-க்கு தக்காளி விற்பனை நடந்து வருகிறது. 3 முதல் 4 நாட்களில் தக்காளி விலை முழுமையாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் தொடர் நடவடிக்கையால் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது. பண்ணை பசுமைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து காய்கறிகளின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த அரசு முயற்சி எடுத்து வருகிறது. தேவைக்கு ஏற்ப வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். காய்கறி விலை உயர்வு தொடர்ந்து நீடித்தால் நியாய விலைக்கடைகளில் கூட குறைந்த விலையில் காய்கறிகளை விற்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.