தன்னுடைய பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டதனால் அந்நிறுவனத்தின் மீது அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்ற பேஸ்புக் நிறுவனத்திற்கு 50 ஆயிரம் டாலர் அபராதம் விதித்திருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜெசன். வழக்கறிஞரான இவருடைய பேஸ்புக் கணக்கு கடந்த 2022ம் ஆண்டு முடக்கப்பட்டுள்ளது. இரவு தூங்கி காலையில் எழுந்து தன்னுடைய பேஸ்புக்கை திறந்து பார்த்தபோது, அது முடக்கப்பட்டுள்ளது தெரியவந்திருக்கிறது.
பின்னர், குழந்தைகள் தொடர்பான ஆபாச பதிவுகளை பார்த்ததால் அவருடைய கணக்கை முடக்குவதாக பேஸ்புக் நிறுவனம் அதற்கு விளக்கம் அளித்திருக்கிறது. ஆனால், ஜெசன் அப்படி எதுவும் பேஸ்புக்கில் பார்க்கவில்லை. அந்நிறுவனத்தின் விதிமுறைகள் எதையும் மீறவில்லை என பேஸ்புக் நிறுவனத்திற்கு விளக்கம் அளித்திருக்கிறார்.
அப்படியிருந்தும் பேஸ்புக் நிறுவனம் அவருடைய விளக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து அவரது பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டு இருந்திருக்கிறது. இதனால் மனவுளைச்சலுக்கு ஆளான ஜெசன், ஜார்ஜியா மாகாண நீதிமன்றத்தில் பேஸ்புக் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
இந்த வழக்கில், ஜெசனுக்கு சாதகமாக இப்போது தீர்ப்பு வந்திருக்கிறது. எந்த முகாந்திரமும் இல்லாமல் ஜெசனுடைய பேஸ்புக் அக்கவுண்ட்டை முடக்கியதற்காக அந்நிறுவனத்திற்கு 50 ஆயிரம் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.