தமன்னாவின் ‘காவாலா’ பாடலின் சிம்ரன் வெர்ஷன் வைரல்- ஏஐ தொழில்நுட்பம்.!

ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடலில் சிம்ரன் நடனமாடும் வகையில் ஏஐ மூலம் வீடியோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘Kaavaalaa’ பாடல் கடந்த ஜூலை 6-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலுக்கு தமன்னா நடனமாடியிருந்தார். இந்நிலையில், ஏஐ எனப்படும் ஆர்டிஃபிஷியல் இன்டலிஜன்ஸ் (Artificial intelligence) தொழில்நுட்பத்தின் மூலம் ‘காவாலா’ பாடலுக்கு சிம்ரன் நடனமாடும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், நடிகை தமன்னாவே இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியதுடன் நடிகை சிம்ரனையும் டேக் செய்துள்ளார்.