ஆடி மாதம் தொடங்கியுள்ள நிலையில், முதல் நாளில் தமிழகம் முழுவதும் 106 மில்லியன் யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடப்பாண்டு காற்றாலை மின் உற்பத்தி சீசன் ஜூன் 1-ம் தேதி தொடங்கியுள்ளது. காற்றின் வேகம் தினமும் மாறுபட்ட காரணத்தால் அதிகபட்சமாக 80 மில்லியன் யூனிட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. ஆடி மாதம் காற்றின் வேகம் அதிகம் இருக்கும் என்பதால் காற்றாலைகள் தொழிலில் ‘பீக் சீசன்’ என்று அழைக்கப்படுகிறது.
நடப்பாண்டு ஆடி மாதம் நேற்று முன்தினம் (ஜூலை 17) தொடங்கியது. முதல் நாளில் இருந்தே காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காற்றாலைகள் மூலம் அதிக மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இது தொடர்பாக இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கஸ்தூரி ரங்கையன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: ஆடி மாதம் தொடங்கிய முதல் நாளில் மொத்தம் 106 மில்லியன் யூனிட் மின்உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தினமும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் எதிர்வரும் நாட்களில் மின் உற்பத்தியும் சிறப்பாக இருக்கும்.
நேற்று தமிழகத்தின் சில பகுதிகளில் மேகமூட்டம், மழைப் பொழிவு காணப்பட்டதால் காற்றின் வேகம் சற்று குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக காற்றாலைகள் மூலம் முறையே 12 ஆயிரம் மில்லியன் யூனிட் வீதம் மொத்தம் 24 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. காற்றாலைகள் மூலம் அதிக மின் உற்பத்தி செய்யப்பட்டாலும், தமிழக அரசு அதை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்வதில்லை.
அனல் மின் நிலையங்கள் மூலம் போதிய மின் உற்பத்தி கிடைப்பதால் காற்றாலை மின்சாரத்தை வாங்க ஆர்வம் காட்டுவதில்லை. ஏற்கெனவே வழங்கப் பட்டு வந்த சலுகைகளையும் திரும்பப் பெற்று வருகிறது. இது ஏற்புடையதல்ல. பழைய காற்றாலைகளை பயன்படுத்துவதை நிறுத்துமாறு அரசு அறிவுறுத்துகிறது. மின் உற்பத்தி செய்யப்பட்டு வரும் காற்றாலைகள் பழையதாக இருந்தால் என்ன, புதிதாக இருந்தால் என்ன, அவற்றில் இருந்து மின் உற்பத்தி செய்யும் வரை அவற்றை பயன்படுத்த வேண்டும். இதுகுறித்து எங்கள் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து அரசு கலந்து பேசி முடிவு மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்