தமிழ்நாடு அரசின் ஆய்வு அறிக்கையை ஏற்று மெரினாவில் பேனா சிலைக்கு அனுமதி அளித்த மத்திய அரசு!

மெரினாவில் கடலுக்குள் கலைஞர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் வைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு அனுமதி.

முன்னாள் முதலமைச்சர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி அவருக்கு மெரினாவில் கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் வைப்பதற்கு தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழுக்கு செய்த தொண்டு, அவரது எழுத்தாற்றல், அவரது கையெழுத்து பல தலைமுறைகளின் தலையெழுத்தையே மாற்றியது. அப்படிப்பட்ட ஒரு தலைவருக்கு நினைவுச் சின்னம் வைப்பதற்காக தமிழ்நாடு அரசு ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்திருந்தது.

ஆனால், கடலுக்குள் நினைவுச் சின்னம் வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என சூழலியல் அமைப்புகள் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தச் சூழலில், அதற்கான ஆய்வு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழுவுக்கு அனுப்பியிருந்தது தமிழ்நாடு அரசு.

அந்த ஆய்வு அறிக்கையினை ஏற்றுக்கொண்ட அந்த அமைப்பு 15 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு முன் ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்திடம் இருந்து தடையில்லா சான்று பெற வேண்டும். கடலோர பாதுகாப்பு மண்டல விதிகளுக்கு உட்பட்டு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கட்டுமானத்திற்கு நிலத்தடி நீரை பயன்படுத்த கூடாது உள்ளிட்ட 15 நிபந்தனைகளுடன் மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்துள்ளது.