தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ்!

தற்போதைய தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் நாளையுடன் பணி ஓய்வு பெறும் நிலையில், தமிழ்நாடு அரசின் 49வது தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி பொறுப்பேற்றது. மே 7ம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அன்றைய தினமே புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு அரசிற்கு பக்கபலமாக செயல்பட்டு வந்த இறையன்பு ஐ.ஏ.எஸ் நாளையுடன் பணி ஓய்வு பெறுகிறார். அடுத்த தலைமைச் செயலாளர் யார்? என்கிற விவாதம் கடந்த ஒருவார காலமாகவே நடைபெற்று வந்த நிலையில், இன்று அதற்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் 49வது தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிவ்தாஸ் மீனா, 1964ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி பிறந்தவர். ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா பொறியியல் கல்லூரியில் சிவில் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர். அதன்பின் ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். ராஜஸ்தானி, தமிழ், ஆங்கிலம், இந்தி, ஜப்பானிய மொழிகளை கற்றுள்ளார் சிவ்தாஸ் மீனா.

1989ஆம் ஆண்டு ஐஏஏஸ் தேர்ச்சி பெற்று, தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரியாக சிவ்தாஸ் மீனா பணியில் சேர்ந்தார். முதன்முதலில் காஞ்சிபுரத்தில் உதவி ஆட்சியர் பயிற்சியை தொடங்கிய அவர், வேலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் என படிப்படியாக பதவி உயர்வு பெற்றார்.

ஊரக வளர்ச்சித் துறை, நில நிர்வாகத் துறை, போக்குவரத்துத் துறை என பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் உள்பட பல முக்கிய பதவிகளை சிவ்தாஸ் மீனா வகித்துள்ளார்.

மேலும், இவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4 தனிச் செயலாளர்களில் ஒருவராக இருந்தவர். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்த சிவ்தாஸ் மீனாவை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.