தமிழ்நாட்டில் மேம்பாட்டு திட்டங்களில் ஜப்பான் நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும் – ஜப்பான் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

அரசுமுறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் மேம்பாட்டு திட்டங்களில் ஜப்பான் நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும் என ஜப்பான் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டை ஒன் ட்ரில்லியன் பொருளாதாரத்தை மேம்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதற்காக பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்காக அழைப்பினை விடுத்திருந்தார்.

இந்நிலையில் முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் முதலமைச்சர். சிங்கப்பூர் பயணம் முடிந்து, தற்போது ஜப்பானில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் (JETRO) இணைந்து ஒசாகாவில் நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இதில் 80 ஜப்பானிய நிறுவனங்களின் மூத்த மேலாண்மை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதில், செங்கல்பட்டு மாவட்டம்திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் ‘ஏர்பேக் இன்ஃப்ளேட்டர்’ தயாரிப்பு தொழிற்சாலை விரிவாக்கத் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. டைசல் வணிக இயக்கப் பிரிவுத் தலைவர் கென் பாண்டோ, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் விஷ்ணு ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாடு அரசு 2024 ஜனவரி 10, 11 ஆகிய தேதிகளில் சென்னையில் நடத்தவிருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு, ஜப்பான் ஒத்துழைப்பு தரவேண்டும். ஜப்பானின் பொருளாதார, வர்த்தக, தொழில் அமைச்சகம் (எம்இடிஐ), ஜெட்ரோ நிறுவனம், ஜப்பான் வணிக, தொழில் பேரவை (ஜேசிசிஐ) ஆகியவற்றுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கனகாவா, ஹிரோஷி மாகாணங்கள், பேங்க் ஆஃப் டோக்கியோ உள்ளிட்ட 3 வங்கிகளுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரூ.5,596 கோடி முதலீடு, 4,244 பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் ஐந்து ஜப்பானிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.

தமிழ்நாட்டில் திட்ட அனுமதிகளை விரைவாகப் பெறும் வகையில், ஒற்றைச்சாளர போர்ட்டல் 2.0 மற்றும் ‘TNSWP’ என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளோம். இதனால், முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

ஜப்பானிய நிறுவனங்கள் பெரும்பாலும் உற்பத்தி சார்ந்த துறைகளில் மட்டுமே முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன. இதை சற்றே விரிவுபடுத்தி, மேம்பாட்டுத் திட்டங்களிலும் முதலீடு செய்ய முன்வர வேண்டும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் புதிய தொழில் பூங்காக்களை அமைத்து வருவதுடன், உள்கட்டமைப்புகளையும் மேம்படுத்தி வருகிறோம்.” என பேசினார்.