தமிழ்நாட்டி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு!

ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாத இறுதியில் தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஒரு மாத கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் 100 ஃபாரன் ஹீட் அளவுக்கு வெப்பம் அதிகரித்து வருகிறது. அதனால், ஜூன் 1ம் தேதியே பள்ளிகளைத் திறந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு சிரமப்பட வேண்டியதாக இருக்கும் என்பதால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் பள்ளிக்கல்வித்துறை செயலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆலோசனையின் மூலம் ஜூன் 5 அல்லது 7ம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என இரண்டு தேதிகள் முடிவு செய்யப்பட்டு முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. முதலமைச்சர் ஜூன் 7ம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என அனுமதி அளித்துள்ளார்.

இந்நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருக்கிறார்.