திருச்சி மணப்பாறையில் புதிய நிறுவனத்தை தொடங்கும் டாடா – எவ்வளவு முதலீடு? யாருக்கெல்லாம் வேலை கிடைக்கும்?

திருச்சி மணப்பாறையில் தமிழ்நாடு அரசு புதிதாக உருவாக்கியுள்ள மணப்பாறை சிப்காட்டில் 283 ஏக்கரில் புதிய நிறுவனத்தை தொடங்குகிறது டாடா குழுமம்.

இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறது டாடா குழுமம். அந்நிறுவனம் ஏற்கனவே மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை தமிழ்நாட்டில் நடத்தி வந்தாலும்… அடுத்தடுத்து தமிழ்நாட்டில் முதலீடு செய்து வருகிறது. ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஆப்பில் ஐபோன் தயாரிப்பு ஆலைக்கான கட்டுமானப்பணியை துவங்கியிருக்கிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டின் மத்திய மாவட்டமான திருச்சியில் உள்ள மணப்பாறையில் தமிழ்நாடு அரசு 1077 ஏக்கரில் புதிய சிப்காட் தொழிற் பூங்காஅவை உருவாக்கியிருக்கிறது. அதில் இப்போது 283.86 ஏக்கர் நிலம் டாடா நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டிருப்பதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.

டாடா குழுமம் இந்த 283 ஏக்கரில் 90 சதவீதம் மாஸ் உற்பத்தி நிறுவனத்தை அமைக்க மட்டுமே சாத்தியம் உள்ளது. அந்த வகையில் அதிகப்படியான திறமையான ஊழியர்களை ஈர்க்க முக்கிய இடமாக மணப்பாறை இருக்கும் என நினைக்கிறது டாடா. குறிப்பாக தென் தமிழகத்தில் இருந்து வேலைவாய்ப்புக்காக சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் இளைஞர்களை ஈர்க்க இந்த இடம் ஏதுவாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், சமீபத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் டாடா டெக்னாலஜிஸ் நிறுவன இணைந்து 71 ஐ.டி.ஐ.களில் ரூ.2877.43 கோடி மதிப்பில் Industry 4.0 தரத்திலான தொழில்நுட்ப மையங்கள் அமைக்கும் முயற்சியில் இறங்கியது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக ரூ.762.30 கோடி செலவில் 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில்நுட்ப மையங்கள் துவங்கப்பட்டது.

இந்த திட்டம் மூலம் டாடா குழுமத்தின் புதிய தொழிற்சாலைக்கு போதுமான ஊழியர்களை ஒவ்வொரு வருடமும் பெற முடியும் என்ற நோக்கில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் இருந்தும் ஊழியர்களை ஈர்க்க திட்டமிட்டுள்ளது டாடா குழுமம்.