திருவாரூர் கலைஞர் கோட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலினும் அவரது சகோதரி செல்வியும் இணைந்து திறந்து வைத்தனர்!

திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கட்டப்பட்ட திருவாரூர் தேர் வடிவிலான கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அவரது சகோதரி செல்வியும் இணைந்து திறந்துவைத்தனர்.

ஐம்பது ஆண்டுகால தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் கருணாநிதி, மறக்க முடியாத மறுக்க முடியாத ஒரு தலைவர். தந்தை பெரியாரின் வழியில், அண்ணாவின் வழிகாட்டுதலில் தமிழ்நாட்டை 5 முறை ஆட்சி செய்திருக்கிறார் கலைஞர் கருணாநிதி.

அவரது ஆட்சிக் காலத்தில் மக்கள் பயனுர அவர் வகுத்த திட்டங்களும் கொள்கைகளும் எண்ணற்றவை. ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு தொடங்கி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள், பெண்கள் முன்னேற்றம், மாணவர்களின் நலன் என அனைவருக்குமான ஒரு முதல்வராகவும் தலைவராக செயல்பட்டவர் அவர்.

அவரின் மறைவுக்குப் பிறகு கடந்த 2021ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு, கலைஞர் கொள்கைகளையும், செயல்திட்டங்களையும் செயல்படுத்தி திராவிட மாடல் ஆட்சியை தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டின் மாபெரும் தலைவரான கலைஞர் கருணாநிதியின் பெயரில் சமீபத்தில் கிண்டியில் கலைஞர் கருணாநிதி பன்னோர்க்கு உயர்சிகிச்சை மருத்துவமனையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.

ஆனால், கலைஞர் பிறந்த திருவாரூர் மண்ணில், அவருக்காக பெருமை சேர்க்கும் வகையில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டு வந்தது. அதனுடைய கட்டுமானப் பணிகள் முழுமையாக் நிறைவடைந்த நிலையில் அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்திருக்கிறார்.

திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளையின் மூலம் சுமார் கலைஞரின் நினைவாக ரூ.12 கோடியில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டது. 7000 சதுர அடி பரப்பில் திருவாரூர் ஆழித்தேர் வடிவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. கோட்டத்தில் கருணாநிதி சிலை, முத்துவேலர் நூலகம் பழைய புகைப்படங்கள், திருமண மண்டபங்கள் உள்ளன.

திறப்பு விழாவில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். அதேபோல, உடல்நிலை பிரச்னை காரணமாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டதால், அவர் அனுப்பிய வாழ்த்துரையை திமுக எம்.பி. திருச்சி சிவா மேடையில் வாசித்தார். இறுதியாக தலைமை உரையாற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.