தெற்கு ரயில்வேயில் தமிழகத்தில் 61 உள்பட 90 ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.934 கோடி ஒதுக்கீடு..!

அமிரீத் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயில் 90 ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.934 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் அமிரீத் பாரத் ரயில் நிலைய திட்டம் என்னும் புதிய கொள்கையை ரயில்வே அமைச்சகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது. இதன்படி ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்தும், வசதிகளின் தேவையை கருத்தில் கொண்டு பெருந்திட்டம் தயார் செய்யப்படும். மிக முக்கியமாக குறைந்தபட்ச அத்தியாவசிய வசதிகளை கருத்தில் கொண்டு ரயில் நிலையங்களின் மேல்தளத்தில் அங்காடிகள், வணிக நிறுவனங்கள் அமைக்கப்படும்.

ரயில் நிலையங்களில் ஏற்கெனவே உள்ள வசதிகளுக்கு மாற்றாக மேம்பாடும் மற்றும் புதிய வசதிகளை அறிமுகம் செய்யப்படும். மேலும், தகவல் பலகைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், பயணிகள் தங்கும் அறை, நடைமேடைகள், ஓய்வு அறைகள், அதிகாரிகள் ஆய்வு அறை ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்படும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த தெற்கு ரயில்வேயில் 90 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் 61 ரயில் நிலையங்கள், கேரளாவில் 26, ஆந்திரா, கர்நாடக மற்றும் புதுச்சேரியில் தலா ஒன்று என்று மொத்தம் 90 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக ரூ.934 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில், சென்னை கோட்டத்தில் 44 பணிகளை மேற்கொள்ள ரூ.251.97 கோடி, சேலம் கோட்டத்தில் 22 பணிகளை மேற்கொள்ள ரூ.150.47, பாலக்காடு கோட்டத்தில் 26 பணிகளை மேற்கொள்ள ரூ.195.54 கோடி, திருவனந்தபுரம் கோட்டத்தில் 15 பணிகளை மேற்கொள்ள ரூ.108 கோடி, திருச்சி கோட்டத்தில் 22 பணிகளை மேற்கொள்ள ரூ.123.47 கோடி, மதுரை கோட்டத்தில் 16 பணிகளை மேற்கொள்ள ரூ.104.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது 35 ரயில் நிலையங்களில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள ரயில் நிலையங்களில் விரைவில் பணிகள் தொடங்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.