தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து சரத்பவார் விலகுவதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த அந்தக் கட்சியின் தலைவராக யார் பொறுப்பேற்கப்போவது என மூத்த தலைவர்கள் ஆலோசனை.
இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத்பவார் அந்தப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். அவரது 38 வயதிலேயே மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர். தொடர்ந்து நான்கு முறை முதல்வராக இருந்ததோடு, காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின்போது ராணுவம் மற்றும் வேளாண்மை துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
1999-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டார். அதே ஆண்டு அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். மூத்த அரசியல் தலைவரான அவருடன் அனைத்துக் கட்சி தலைவர்களும் நட்பு பாராட்டிவருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று மும்பையில் உள்ள ஒய்.பி.சவான் அரங்கில் சரத்பவாரின் சுயசரிதை புத்தகம் வெளியிடப்பட்டது. அப்போது பேசிய அவர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இந்த எதிர்பாராத அறிவிப்பு ஒட்டுமொத்த இந்திய அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தச் சூழலில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மும்பையில் உள்ள ஒய் பி சவான் மையத்தில் நடைபெறும் ஆலோசனையில் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.