மணிப்பூர் குறித்த எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை நடவடிக்கைத் தொடங்கிய 3 நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டது. அவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு.
மழைக்காலக்கூட்டத்தொடரின் 7வது நாளில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் கூடியது. மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்துடன் அவையைத் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. கேள்வி நேரத்துக்கு எதிர்க்கட்சிகள் இடையூறு ஏற்படுத்திய நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவை மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.
இதனிடையே எதிர்க்கட்சிகள் அவையை அமைதியாக நடத்த விடுவதில்லை என்று நாடாளுமன்றங்களுக்கான விவாகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,”அவர்கள் (எதிர்க்கட்சிகள்) அமைதியான முறையில் விவாதத்தில் பங்கேற்பதில்லை, அவையில் எந்த மசோதாவையும் நிறைவேற்ற ஒத்துழைப்பதில்லை. நாங்கள் அவர்களிடமிருந்து ஆக்கபூர்வமான பரிந்துரைகளை எதிர்ப்பார்க்கிறோம். ஆனால் அவர்கள் திடீரென நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். தேவை ஏற்படும் போது நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது விவாதம் நடத்துவோம். எங்களிடம் பெரும்பான்மை உள்ளது. அதனால் எங்களுக்கு கவலையில்லை. மணிப்பூர் விவாகரம் குறித்த உண்மை வெளிவர வேண்டும் என்று அவர்கள் விரும்பினால், அதற்கு நாடாளுமன்றத்தை விட சிறந்த இடம் எதுவுமில்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் அவைத் தொடங்கியதும் அவைத்தலைவர் ஜக்தீப் தன்கர், பிறந்த நாள் கொண்டாடும் உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து ஒய்வு பெற இருக்கும் உறுப்பினருக்கு பிரியாவிடை குறிப்பும் வாசித்தார். அதனைத் தொடர்ந்து அவைக்கு விதி 267 -ன் கீழ் மணிப்பூர் குறித்து விவாதிக்க 47 நோட்டீஸ் வந்துள்ளதாக அவைத் தலைவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் குறுகிய கால விவாதத்தினை தான் ஏற்றுக்கொண்டதாகவும், அரசு அதனை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் மீண்டும் தெளிவு படுத்திய அவைத் தலைவர், கட்சி நலன்களுக்கு அப்பாற்பட்டு இந்த விஷயத்தில் தான் ஏற்றுக்கொண்டது போல குறுகிய கால விவாதத்திற்கு ஒத்துழைக்குமாறு எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொண்டார்.
இதற்கு திரிணமூல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ. பிரையன் எதிர்ப்பு தெரிவிக்க தலைமைக்கு மரியாதை தருமாறு அவரைக் கண்டித்தார். தொடர்ந்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.
6 நாட்களாக முடங்கிய நாடாளுமன்றம்: நாடாளுமன்ற மழைக்காலக்கூட்டத்தொடர் கடந்த வாரம் வியாழக்கிழமை (ஜூலை 20) தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதல் மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், மணிப்பூர் விவாகரம் குறித்து பிரதமர் அறிக்கை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சியின் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். குறுகிய நேரத்தில் விவாதிக்க தயார் என அரசு தரப்பில் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. மணிப்பூர் விவாகரம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளும் தொடர்ந்து 6 நாட்களாக ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.