தொடர்ச்சியாக 3 டி20 போட்டிகளில் அரை சதம் அடித்த சாய் சுதர்ஷன்

தொடர்ச்சியாக 3 டி20 போட்டிகளில் அரை சதம் அடித்து , கட்டம் கட்டி கலக்கும் சாய் சுதர்ஷன்

கோவைதமிழகத்தை சேர்ந்த இளம் பேட்ஸ்மேனான சாய் சுதர்ஷன், தொடர்ச்சியாக 3 டி20 போட்டிகளில் அரை சதம் கடந்து அசத்தியுள்ளார். அண்மையில் முடிந்த ஐபிஎல் சீசனில் தனது அபார ஆட்டத்திறனை அவர் வெளிப்படுத்தி இருந்தார். தற்போது அதை அப்படியே டிஎன்பிஎல் கிரிக்கெட் பக்கம் மடைமாற்றி உள்ளார். அவர் கடைசியாக விளையாடிய 3 டி2 போட்டிகளில் முறையே 96, 86, 90 என ரன்கள் குவித்துள்ளார்.

21 வயதான சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சாய் சுதர்ஷன், உள்ளூர் பந்து வீச்சாளர்கள் தொடங்கி உலகப் பந்து வீச்சாளர்கள் வரையில் தனது மட்டை வீச்சால் துவம்சம் செய்து வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

ஐபிஎல் 2023 சீசனில் 8 போட்டிகளில் விளையாடி 362 ரன்கள் எடுத்தார். இதில் 3 அரை சதங்கள் அடங்கும். இதில் ஒரு சதம் அழுத்தம் அதிகம் நிறைந்த இறுதிப் போட்டியில் பதிவு செய்தது. அதில் 96 ரன்களை அவர் குவித்திருந்தார். அவரது ஆட்டத்தை அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் நியூஸிலாந்து வீரர் வில்லியம்சன் ஆகியோரும் பாராட்டி உள்ளனர்.

அதன் பிறகு கடந்த 12-ம் தேதி தொடங்கிய டிஎன்பிஎல் டி20 லீக் தொடரில் லைக்கா கோவை கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணி இந்த சீசனில் விளையாடிய முதல் போட்டியில் திருப்பூர் அணிக்கு எதிராக 45 பந்துகளில் 86 ரன்கள் குவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று நெல்லை அணிக்கு எதிராக 52 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இந்த மூன்று டி20 போட்டிகளிலும் அடுத்தடுத்து அரை சதம் கடந்துள்ளார். இருந்தாலும் சதத்தை நூலிழையில் மிஸ் செய்துள்ளார். கூடிய விரைவில் அந்த மூன்று இலக்கத்தை அவர் எட்டுவார் என நம்புவோம்.