தொடர் மழை காரணமாக சென்னைகுடிநீர் ஏரிகளின் நீர்இருப்பு அதிகரிப்பு

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர்இருப்பு அதிகரிப்பு

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் அடங்கிய திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளின் நீர் இருப்பு அதிகரித்து வருகிறது.

இதில், நேற்று காலை நிலவரப்படி, பூண்டி ஏரிக்கு, கிருஷ்ணா நீர், மழைநீர் என, விநாடிக்கு 330 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.இதனால், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு, 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, 1,257 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 27.66 அடியாகவும் உள்ளது. சென்னை குடிநீர் தேவைக்காக கால்வாய்கள் மூலம் விநாடிக்கு 289 கன அடி திறந்து விடப்படுகிறது.

புழல் ஏரிக்கு, சோழவரம் ஏரி நீர், மழைநீர் என, விநாடிக்கு 258 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு, 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு, 2,178 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 15.76 அடியாகவும் இருக்கிறது. சென்னை குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 202 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு, 18.86 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரிக்கு விநாடிக்கு 12 கன அடி மழைநீர் வந்து கொண்டிருக்கிறது. எனவே, சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 428 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 10.57 அடியாகவும் இருக்கிறது. புழல் ஏரிக்கு விநாடிக்கு 220 கன அடி நீர் அனுப்பப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரி: செம்பரம்பாக்கம் ஏரியின் ஆழம் 24 அடி. அதில் தற்போது 19.17 அடிக்கு தண்ணீர் உள்ளது. இந்த ஏரிக்கு 921 கால்வாய்கள் வழியாக தண்ணீர் வருகிறது. நேற்று முன்தினம் இந்த கால்வாய்கள் வழியாக விநாடிக்கு 200 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இவற்றில் சென்னையின் குடிநீருக்காக விநாடிக்கு 103 கன அடி, சிப்காட்டுக்காக விநாடிக்கு 2 கன அடி, பாசனத்துக்கு விநாடிக்கு 10 கனஅடி, ஆவியாதல் மூலம் விநாடிக்கு 59 கன அடி தண்ணீர் வெளியேறியது.

தற்போது பெய்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் விநாடிக்கு 1,146 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் ஏரியின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. ஏரியில் 19.17 கன அடி நீர் மட்டமே இருந்ததால் வெளியேற்றப்படும் நீரின் அளவில் மாற்றம் இல்லை.