நடப்பு தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரில் பட்டம் வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர்

நடப்பு தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரில் பட்டம் வென்ற இந்திய கால்பந்து அணிக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவில் நடைபெற்று வந்த தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரில் 8 அணிகள் கலந்து கொண்டன. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் குவைத் அணிகள் பலப்பரீட்சை செய்தன. இதில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் குவைத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.

இதன் மூலம் இதுவரை நடைபெற்றுள்ள 13 தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி 9 முறை பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களாகவே இந்திய அணி சர்வதேச கால்பந்து அரங்கில் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தி, சீரான வெற்றிகளை குவித்து வருகிறது. வீரர்கள் நல்ல உடற்தகுதியுடன் சிறந்த திறனை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் பட்டம் வென்ற இந்திய கால்பந்து அணிக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தினேஷ் கார்த்திக்: “விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இந்திய அணி. அணியில் இடம்பிடித்துள்ள அனைவருக்கும் வாழ்த்துகள். நீங்கள் எங்களை பெருமை கொள்ள செய்துள்ளீர்கள்” என ட்வீட் செய்துள்ளார்.

வாஷிங்டன் சுந்தர்: “தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு தங்களது திறன், குழு முயற்சியை வெளிப்படுத்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி மற்றும் வீரர்களுக்கு எனது வாழ்த்துகள்” என ட்வீட் செய்துள்ளார்.

இதேபோல இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளும் இந்திய கால்பந்து அணியை பாராட்டி உள்ளன.