நல்ல படம் சமூகத்தில் உரையாடலை நிகழ்த்த வேண்டும் – கழுவேத்தி மூர்க்கன் குறித்து டி.இமான்..!

கழுவேத்தி மூர்க்கன்’ படம் வெளியாகி ஐம்பது நாட்கள் நிறைவடைந்ததையொட்டி இசையமைப்பாளர் டி.இமான் அப்படத்தை சிலாகித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜோதிகா நடித்து கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘ராட்சசி’ படத்தை இயக்கிய சை.கவுதமராஜ் இயக்கத்தில் அருள்நிதி நடித்த படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’. இப்படத்தில் துஷாரா விஜயன் நாயகியாக நடித்திருந்தார். டி. இமான் இசையமைக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஒலிம்பியா மூவிஸ் சார்பில், அம்பேத்குமார் தயாரித்த இப்படம் கடந்த மே 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான இப்படத்தைப் பார்த்த பலரும் சமூகவலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். படம் வெளியாகி ஐம்பது நாட்கள் நிறைவடைந்ததையொட்டி இசையமைப்பாளர் டி.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது: 50 நாட்களாக தொடர்ந்து சமூக ஊடகங்களில் ‘கழுவேத்தி மூர்க்கனை’ பற்றி எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். தலைவர்களும் திரை ஆளுமைகளும் முற்போக்காளர்களும் பல மேடைகளில் படத்தினைப் பற்றி பேசிக் கொண்டே இருக்கிறார்கள். படம் சார்ந்த கூட்டங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. பத்துக்கும் மேலான காட்சிகள் தனியாக சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

ஒரு நல்ல திரைப்படம் என்பது சமூகத்தில் ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டும்; ஏதோ ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும். படம் பேசும் தளத்திலான சூழல்கள் உருவாகும்போது படம் மீண்டும் திரும்பிப் பார்க்கப்பட வேண்டும். அதுவே வெற்றி. 50 நாட்களாக ’கழுவேத்தி மூர்க்கன்’ அவ்வேலையை செய்தபடி பயணித்துக் கொண்டே இருக்கிறான். “நம்ம அடி வாங்குறவங்க பக்கம்தான் நிக்கணும், அவங்கள அடி வாங்காம பார்த்துக்கணும். தோள் கொடுத்தவர்களுக்கு கை குலுக்கி நன்றிகளும் பூங்கொத்துக்களும். தொடர்கிறது பயணம்.” இவ்வாறு டி.இமான் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.