நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த ஞானபிரகாசம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு: ‘நெல்லை பழையபேட்டையில் இயங்கி வரும் ஆசிரியர் பயிற்சி மையத்தில் அலுவலக உதவியாளராகவும், தூய்மைப் பணியாளராகவும் 40 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். எனக்கு முழு ஓய்வூதிய பணப்பலன்களை வழங்கக்கோரி வழக்கு தொடர்ந்தேன். என் மனுவை பரிசீலித்து பணப்பலன்களை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு தள்ளுபடியானது. இருப்பினும் எனக்கு பணப்பலன்கள் வழங்க வேண்டும் என்ற உத்தரவை அதிகாரிகள் இதுவரை நிறைவேற்றவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத கல்வித்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.’ இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த பிறகு, ”பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் பயிற்சி கல்வி இயக்குநர் ஆகியோர் ஜூலை 19-ல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.