மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் வேளாங்கண்ணி மாதா கோயிலில் பசுமை புராதனச் சின்னங்கள் திட்டம்.!​

பசுமை புராதனச் சின்னங்கள் திட்டத்தை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் வேளாங்கண்ணி மாதா கோயிலில் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, காலநிலை மாற்ற பாதிப்பு மீட்டெடுக்கும் பசுமை புராதனச் சின்னங்கள் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, புராதனச் சின்னங்களில் தட்ப வெப்ப நிலை தணிப்பு மற்றும் மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மாதிரி செயல் விளக்கம் மேற்கொள்ள இரண்டு கோயில்கள் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் நாகை வேளாங்கண்ணி மாதா கோயில் ஆகியவற்றில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்தில், கோயில்களில் சூரிய சக்தி விளக்குகள், நீர் மேலாண்மை, வெப்ப மேலாண்மை, பசுமையாக்குதல், கோயில் குளங்களில் சுற்றுச்சூழல் மறு சீரமைப்பு, பிளாஸ்டிக்கை அகற்றுவதுக்கான செயல்பாடுகள் ஆகியவகைள் மேற்கொள்ளப்படும். மேலும், பல்லுயிர்ப் பெருக்கத்தை மேம்படுத்த கோயில் நந்தவனங்களை வளப்படுத்தும் அடங்கும்.

இதன்படி, இந்த இரண்டு கோயில்களுக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படவுள்ளது. இதில், கோயில்களின் வடிவமைப்பு, போக்குவரத்து வசதிகள், மின்சாரம் மற்றும் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள், திடக்கழிவு மேலாண்மை, மின் தேவை, மழை நீர் வடிகால் கட்டமைப்பு உள்ளிட்டவைகள் ஆய்வு செய்து இந்த விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படவுள்ளது.