பதாகைகளை எந்திய படி முழக்கங்கள்: தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடங்கிய மக்களவை!

மழைக்கால கூட்டத்தொடரின் 8-வது நாளில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை கூடிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல், மாநிலங்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 8-வது நாளான இன்று (திங்கள்கிழமை) காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடின. மக்களவைத் தொடங்கியதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து பதாகைகளை எந்திய படிய “மணிப்பூர்…”, “மணிப்பூர்…” என மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இந்த அமளி காரணமாக மக்களவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில் அவை நடவடிக்கைத் தொடங்கியதும் பேசிய சபைத் தலைவர் பியூஸ் கோயல், மணிப்பூர் விவாகரம் தொடர்பாக அரசு விவாதம் நடத்த தயார் என்று கூறிய நிலையிலும், எதிர்க்கட்சிகள் விவாதத்தில் பங்கேற்காமல் ஏன் ஓடுகின்றனர் என்று கேள்வி எழுப்பினார். மேலும், நாடாளுமன்றத்தின் இவ்வளவு நாட்களை எதிர்க்கட்சிகள் வீணடித்துவிட்டதாக குற்றம்சாட்டிய அவர், மணிப்பூர் குறித்த விவாதம் இன்று நடைபெற வேண்டும். மதியம் 2 மணிக்கு விதி 267-க்கு பதிலாக விதி 176-ன் கீழ் விவாதம் நடத்த அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

பியூஸ் கோயலின் பேச்சுக்கு பதில் அளித்த மாநிலங்களை எதிர்க்கட்சிகளின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நாளுமன்றத்தில் வந்து பேச வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். இதனால், ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளுக்கு இடையில் சுமுக முடிவு ஏற்படாததால் மாநிலங்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

டெல்லியில் சேவைகள் மசோதா: இதனிடையே, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டெல்லி சேவைகள் மசோதா இன்றைய அலுவல்களில் பட்டியலிடப்படவில்லை என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “டெல்லி சேவைகள் மசோதா எப்போது தாக்கல் செய்யப்படும் என்று உங்களுக்கு தெரிவிக்கப்படும். அது இன்றைய அலுவல்களில் பட்டியலிடப்படவில்லை. பத்து வேலை நாட்களுக்குள் நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.