பதியன் முறையில் 1500 தேயிலை நாற்றுகள் – உதகையில் உற்பத்தியில் அசத்தும் அரசு தேயிலை பூங்கா..!

உதகை தொட்டபெட்டாவில் உள்ள அரசு தேயிலை பூங்காவில் பதியன் முறையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள 15,000 தேயிலை நாற்றுகளை விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

உதகை தொட்டபெட்டாவில் உள்ள அரசு தேயிலை பூங்காவில் பதியன் முறையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள 15,000 தேயிலை நாற்றுகளை விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் பொருளாதார முதுகெலும்பாக இருப்பது தேயிலை தொழில். மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் தேயிலை சாகுபடி செய்யப்படுகிறது. தேயிலை தொழிலை சார்ந்து நேரடியாக 65 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் உள்ளனர். தேயிலை தூளை உற்பத்தி செய்ய அரசு சார்பில் 16 தேயிலை தொழிற்சாலைகளும், 180 தனியார் தொழிற்சாலைகளும் உள்ளன.

மாறிவரும் சீதோஷ்ண நிலை, வறட்சி, பூச்சி தாக்குதல் போன்றவற்றால் தேயிலை உற்பத்தி பாதிப்படைந்து வந்தது. இந்நிலையில், அனைத்து காலநிலைகளையும் தாங்கி வளர்வதுடன், நோய் எதிர்ப்பு திறனும் கொண்ட தேயிலை நாற்றுகளை தோட்டக்கலைத் துறை உற்பத்தி செய்து அசத்தி வருகிறது.

இது குறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தேயிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தேயிலை விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும் தோட்டக்கலைத் துறை மூலம் உதகை அருகே தொட்டபெட்டா பகுதியில் தேயிலை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு மூலிகைத் தாவரங்கள் மற்றும் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து குறைந்த விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகிறோம். அனைத்து காலநிலைகளையும் தாங்கி வளரும் வகையில் உபாசி- 9 என்ற ரகத்தை சேர்ந்த 15,000 தேயிலை நாற்றுகளை பதியன் முறையில் உற்பத்தி செய்து வருகிறோம்.

பதியன் முறை என்பது வணிகமுறை இனப்பெருக்க முறைகளில் ஒன்றான செடி வளர்ப்பு. செடியின் கிளையை வளைத்து மண்ணில் நுழைத்து அதன் மேல் மண்ணிட்டு பின் தொடர்ந்து நீர் பாய்ச்சினால், மண்ணில் நுழைக்கப்பெற்ற பகுதியின் அடியில் புதிய வேர்கள் உருவாகும். அதன் விளைவாக புதிய செடி துளிர்க்கும். இன்னும் சில மாதங்களில் 15 ஆயிரம் தேயிலை நாற்று களை குறைந்த விலையில் விவசாயி களுக்கு விற்பனை செய்ய உள்ளோம், என்றனர்.