பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு சிறுதானிய உணவு வகைகளை அறிமுகம் செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையை ஏற்று இந்த ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. அதன்பின், பல்வேறு நாடுகளில் முக்கிய பிரமுகர்களும் சிறுதானிய உணவுகளை சாப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சிறுதானியங்களின் ஏற்றுமதி மையமாக இந்தியாவை மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்நாட்டிலும் சிறுதானியங்களை ஊக்கப்படுத்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக மத்திய கல்வித் துறை சார்பில் அனைத்து மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் அண்மையில் கடிதம் அனுப்பப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் செயல்படும் பள்ளிகளில் சிறுதானிய உணவு வகைகளை அறிமுகம் செய்ய வேண்டும். பள்ளி கேன்டீன்களில் சிறுதானிய உணவுகளை சமைத்துபரிமாற வேண்டும். இந்த உணவுவகைகள் குறித்து மாணவ, மாணவியரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இதுதொடர்பாக அந்தந்த மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கல்வித் துறை வட்டாரங்கள் கூறும்போது, “இந்தியாவின் பரிந்துரையின் பேரில் இந்த ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் சிறுதானியங்களை மாணவ, மாணவியரிடையே பிரபலப்படுத்த மத்திய கல்வித் துறை சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மாநில அரசுகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சில மாநிலங்கள் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. பள்ளிகளில் சிறுதானியங்களை அறிமுகப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை கோரியிருந்தோம். சில மாநில அரசுகள் இதுவரை விவரங்களை சமர்ப்பிக்கவில்லை” என்று தெரிவித்தன.