பள்ளிகள் திறப்பை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

நாளை மறுநாள் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்க இருக்கும் நிலையில் சொந்த ஊர்களுக்கு சென்ற பெற்றோர்கள் மாணவர்கள் அவரவர்களின் இருப்பிடத்திற்கு திரும்புவதற்கு ஏதுவாக 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

ஜூன் 12 மற்றும் 14ம் தேதிகள் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை கடந்த வாரம் அறிவித்திருந்தது. இந்நிலையில், கோடை விடுமுறைக்கும் பெற்றோர்களும் மாணவர்களும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கும் நிலையில், அவர்கள் மீண்டும் தங்களது இருப்பிடத்திற்கு திரும்புவதற்கு ஏதுவாக 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் : “கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி 10-ந் தேதி 11-ந் தேதி ஆகிய இரு தினங்களும் கூடுதல் பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் இருந்து வார இறுதி நாட்களில் சென்னைக்கு 650 சிறப்பு பேருந்துகளும், கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம், பெங்களூரு போன்ற இடங்களில் இருந்து வெவ்வேறு பகுதிகளுக்கு 850 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 1,500 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, முன்பதிவு செய்து பயணித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை அனைத்து பேருந்த் நிலையங்களிலும், போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, கண்காணித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரை மற்றும் திருச்சியில் இருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள சேவையினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை திட்டமிட்டு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.