பாமக வன்முறை: நெய்வேலி விரைகிறார் தமிழக காவல்துறை டிஜிபி சங்கர்ஜிவால்!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிர்வாகத்துக்கு எதிராக பாமக சார்பில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து தமிழக காவல் துறை டிஜிபி சங்கர் ஜிவால் நெய்வேலி விரைந்துள்ளார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி நிர்வாகம் நிலக்கரி சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக விளைநிலங்களில் உள்ள பயிர்களை அழித்து, நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டது. இதனைக் கண்டித்து பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்எல்சி நுழைவு வாயில் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதைத்தொடர்ந்து, என்எல்சி ஆலையை பாமகவினர் முற்றுகையிட முயன்றனர். அப்போது பாமகவினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார் அவர்களை கைது செய்தனர். இந்த முற்றுகை போராட்டத்தைத் தொடர்ந்து நெய்வேலி என்எல்சி பகுதியில் 3000க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து, இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது. அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்துச் செல்ல போலீஸார் முயற்சித்தபோது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், காவல்துறை வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கடலூர் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட ஏராளமான போலீஸார் கல்வீச்சு சம்பவத்தில் காயமடைந்தனர். கலவரத்தைக் கட்டுப்படுத்த, தடியடி, கண்ணீர் புகைகுண்டு மற்றும் தண்ணீர் பீய்ச்சி அடித்த போலீஸார், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைத்தனர்.

இதைத்தொடர்ந்து, அந்தப் பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது. கல்வீச்சு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட பலரை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, அன்புமணி ராமதாஸை விடுவிக்க கோரி கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூரில் இருந்து நெய்வேலி மார்க்கமாக இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

இதையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக, தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் நெய்வேலி விரைந்திருக்கிறார். இந்த கல்வீச்சு சம்பவத்தில் காயமடைந்த போலீஸார், கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை இந்தச் சம்பவம் தொடர்பாக 400-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், வன்முறையை முற்றிலுமாக கட்டுக்குள் கொண்டுவந்து இயல்புநிலை திரும்ப நடவடிக்கை மேற்கொள்வதற்காக டிஜிபி சங்கர் ஜிவால் நெய்வேலி சென்றுள்ளார். சம்பவம் நடந்த பகுதியையும், காயமடைந்த காவல் துறையினரையும் டிஜிபி சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.