பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டம் – 8 மாநில முதல்வர்கள் புறக்கணிப்பு

இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆட்சிமன்ற கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்காமல் 8 மாநில முதலமைச்சர்கள் புறக்கணிப்பு

மத்திய திட்டக்குழு என இருந்ததை நிதி ஆயோக் என்ற அமைப்பாக மாற்றியது பாஜக அரசு. இந்த அமைப்பின் கூட்டம் வருடம்தோறும் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உள்ள பிரச்னைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படாமல் தடுப்பதற்கு இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதற்கான ஆலோசனைகளை மேற்கொள்வதற்கும் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நிதி ஆயோக் ஆட்சிமன்ற கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற இருக்கிறது. இதன் ஆட்சிமன்ற குழுவில் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் இடம் பெற்றுள்லனர்.

இந்த கூட்டத்தில், 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கத்துடன், சுகாதாரம், திறன் மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.

இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கலின் ஆளுநர்கள் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், இந்த வருடம் நடக்கும் நிதி ஆயோக் ஆட்சிமன்ற கூட்டத்தை 8 மாநில முதல்வர்கள் புறக்கணித்துள்ளனர்.

தமிழகம், கேரளா, டெல்லி, பஞ்சாப், கர்நாடகா, பீகார், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க முதல்வர் இந்த நிதிஆயோக் நிர்வாக குழு கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கலந்து கொள்ளாததற்கு உடல்நலக் காரணங்களை மேற்கோள் காட்டியுள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் எந்த குறிப்பிட்ட காரணத்தையும் தெரிவிக்கவில்லை. மத்திய அரசின் சமீபத்திய அவசரச் சட்டம் காரணமாக கூட்டத்தை புறக்கணிப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதேபோல, பஞ்சாபின் நலன்களில் கவனம் செலுத்தவில்லை எனக்கூறி கூட்டத்தை புறக்கணிப்பதாக அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். வெளிநாடு பயணம் காரணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்வில்லை என சொல்லப்படுகிறது.